கஜகஸ்தானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து- அரசின் கைகளை மீறி சென்றதையடுத்து, ரஷ்யப் படைகளின் உதவியை அந்த நாட்டு ஜனாதிபதி கோரியுள்ளார். இதையடுத்து, கஜகஸ்தானில் ரஷ்யப் படைகள் நுழைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நேற்று வியாழனன்று கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மேட்டியில் மிகப்பெரிய ரத்தக்களரியாக மாறியது.
டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கஜகஸ்தான் பாதுகாப்பு தரப்பினர் கொன்றதாக கூறப்படுகிறது. தமது தரப்பில் 18 பேர் உயிரிழந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 2000 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்மேட்டியின் வீதிகளில் வாகனங்கள் கொழுத்தப்பட்டன. அரச கட்டிடங்கள் உள்ளிட்ட பலவற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த அடையாளங்கள் தெரிந்தன.
பிரதான விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியிருந்தனர். எனினும், இராணுவம் மீண்டும் விமான நிலையத்தை கைப்பற்றியது.
வியாழக்கிழமை மாலை அல்மேட்டியின் பிரதான சதுக்கத்தில் மோதல் வெடித்தது.
கஜகஸ்தானின் 30 ஆண்டுகால சுதந்திர காலத்தில் மிக மோசமான வன்முறைகளாக இந்த மக்கள் போராட்டமே கருதப்படுகிறது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடு. எண்ணெய் மற்றும் யுரேனியம் உற்பத்திக்கு பெயர் போன அங்கு, தனது சார்பு ஆட்சியாளர்களை பாதுகாக்க ரஷ்யா களமிறங்கும் வாசல் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இயை வசதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள இரத்த களரியின் அளவை உடனடியாக சரியாக கணிக்க முடியவில்லை.
இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டில் பயிற்சியளிக்கப்பட்ட “பயங்கரவாத குழுக்களால்” நடத்தப்படுதாக வர்ணித்த, கஜகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev, ரஷ்யா தலைமையிலான இராணுவ கூட்டணி தலையிட்டு, அவர்களை கட்டுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யா எத்தனை படைகளை அனுப்பும், அல்லது எவ்வாறு கஜகஸ்தான் விவகாரத்தை கையாளும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை.