‘இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஐநா சபை அதை அனுமதிக்குமா?’- இப்படி சம்மந்தமே இல்லாத இரண்டு வசனங்களை எழுதிய சுலோக அட்டையை தாங்கியபடி, வவுனியாவில் கடந்த 29ஆம் திகதி ஒரு இளைஞன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த இளைஞன் இலங்கையின் கடனை அடைப்பதற்கும், ஐநா சபைக்கம் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை எழுப்பி, இளைஞனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுவதற்கு யாரோ வில்லங்க யோசனை சொல்லிக் கொடுக்க, அந்த இளைஞன் ஆர்வக் கோளாறில் ‘ஏதோ’ செய்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.
இந்த ஆர்வக்கோளாறு இளைஞன், நேற்று முன்தினம வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில், சுலோக அட்டையுடன் நின்றார்.
‘இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ‘ என அதில் எழுதியிருந்தது.
கூடவே, இலங்கை தேசியக்கொடியையும் ஏந்தியிருந்தார்.
இளைஞனை சிலர் வேடிக்கையாகவும், சிலர் பரிதாபமாகவும் பார்த்ததால், மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, இளைஞனை அங்கிருந்து பொலிசார் அகற்றினர்.
பின்னர், பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் சுலோக அட்டையை பிடித்துக் கொண்டு நின்று விட்டு, தனது தொழிலுக்கு சென்று விட்டார்.
யார் இந்த இளைஞன்?
இலங்கை மீள முடியாத கடனில் சிக்கி வருகிறது, சீனாவின் கடன்பொறியில் சிக்கி வருகிறது என பல எச்சரிக்கைகளை இந்த நாட்களில் கேட்டிருப்பீர்கள். அரசாங்கமே கடனை செலுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில். தனியொருவனாக கடனை செலுத்த தயாரென அறிவித்த இந்த வவுனியா இளைஞன் யார் என்ற ஆர்வ மிகுதியான கேள்வி உங்களிற்கு வரும்.
நேற்று முன்தினம் சுலோக அட்டையுடன் நின்ற பின்னர், உடனடியாகவே அவர் ‘இலங்கையின் கடனை அடைக்க’ தீவிரமாக உழைக்க ஆரம்பித்து விட்டார்.
வவுனியா, கொமர்ஷல் வங்கிக்கு அருகில் செருப்பு தைத்து வருகிறார் அந்த இளைஞன்.
செருப்பு தைத்து நாட்டின் கடனை அடைக்க தயாராகிய இளைஞனை பாராட்டத்தானே செய்ய வேண்டும்.