28.5 C
Jaffna
August 9, 2022
இலங்கை

கிளிநொச்சி பெண் கொலை: ஏன்…எப்படி கொன்றேன்; 22 வயது கொலையாளி ‘பகீர்’ தகவல்!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் தனித்திருந்த மூதாட்டியை கொலை செய்ததாக, 22 வயது இளைஞன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நகைகளை திருடுவதற்காக மூதாட்டியை அடித்துக் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, அம்பாள்குளத்திதை சேர்ந்த மூதாட்டியொருவர் நேற்று, யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டிருந்தார். உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது.

இராசேந்திரம் இராசலட்சுமி (67) என்பவரே கொல்லப்பட்டிருந்தார்.

இவர், பிரித்தானியாவில் தனது மகனுடன் வசித்து வந்த கடந்த 3 வருடங்களின் முன் இலங்கை திரும்பியுள்ளார்.

இராசேந்திரம் இராசலட்சுமி பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர். அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கணவர் பூநகரியில் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இராசேந்திரம் இராசலட்சுமி தற்போது கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து, தனியாக தங்கியிருந்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) வங்கிக்கு சென்று திரும்பியிருந்தார். பின்னர், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

இவர் காணாமல் போன விடயம் மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

மூதாட்டி காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்பட்டதால், காணாமல் பொன பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

பொலிசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போது, காணாமல் போன பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் 22 வயது இளைஞனின் மீது பொலிசாரின் கவனம் திரும்பியது.

குற்றப்பின்னணியுடைய, போதைப்பொருளுக்கு அடிமையான அந்த இளைஞன் ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியுள்ளவர்.

நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்ட போது, போதையில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு பொலிசார் விசாரணை நடத்திய போது, அவர் கொலையை ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், சந்தேகிக்கும் விதமாக, முரண்பாடான தகவல்களை தெரிவித்து வந்தார்.

மறுநாள் காலையில் நடத்திய விசாரணையில் அனைத்தையும் கக்கி விட்டார். மூதாட்டியை அடித்துக் கொன்று விட்டு, சடலத்தை யூனியன் குளத்திலுள்ள பாலமொன்றின் அடியில் போட்டதாக தெரிவித்தார்.

அந்த இடத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு பொலிசார் சென்றனர்.

அம்பாள்குளம் பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் சடலத்தை வீசியதாக அடையாளம் காட்டினார். மரப்பாலத்தின் கீழ், ஆற்றில் உரப்பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.  ஆற்றுக்குள் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளைக்காக கொலை

கொள்ளையிடுவதற்காக மூதாட்டியை கொன்றதாக கொலையாளி வாக்குமூலமளித்துள்ளார்.

பழைய ஓடுகளை பையொன்றில் போட்டு, அந்த பையினால் மூதாட்டியின் தலையில் அடித்துக் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கொலையை செய்த பின், சடலத்தை உரப்பையொன்றில் போட்டு கட்டியுள்ளார். நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து, அவரது வெகோ மோட்டார் சைக்கிளை பெற்று, அதில் கந்தபுரத்திற்கு சடலத்தை கொண்டு சென்று, மரப்பாலத்தின் கீழ் வீசியுள்ளார்.

மூதாட்டியை கொலை செய்த பின், அவரிடமிருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர். ஒரு சங்கிலி, மோதிரம், ஒரு சோடி காதணி, ஒரு சோடி வளையல் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் பொலிசாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

எரிபொருள் தட்டுப்பாடு தகவல் வெளியிட்டவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!