யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நொதேர்ன் சென்ரர் தனியார் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகள் நேற்றிரவு இப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் செய்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதுடன், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை பிரதிநிதியை அழைத்தனர்.
இந்த விவகாரம் பொலிசாருக்கும், சுற்றாடல் அதிகாரசபையினருக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
வைத்தியசாலை அனுமதி பெறும்போது கழிவு அகற்றுவது தொடர்பாக சமர்ப்பித்த தகவல்களை வைத்தியசாலை மீறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுற்றாடல் அதிகாரசபை வைத்தியசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரவுள்ளது.
அத்துடன், ஆபத்தான மருத்துவ கழிவுகளை பொறுப்பில்லாமல் மக்களிற்கு அபாயமேற்படுத்தும் விதமாக எரித்தழித்த விவகாரத்தில், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை மீது, யாழ்ப்பாணம் பொலிசார் ஊடாக யாழ் மாநகரசபை வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.