27.6 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

‘மகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது’; மோடியை சந்திப்பதை தவிர்க்க சம்பந்தன் சொன்ன காரணம்: இன்று பகடையாகிறதா தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (20) கொழும்பில் நடைபெறவுள்ளது.

தமிழ் மொழி பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்து இந்திய பிரதமரிடம் ஆவணமொன்றை கையளிக்கவுள்ளன.

தமிழ் மக்களிற்கு உச்சபட்ச அதிகாரங்களுடனான சமஷ்டி அடிப்படையிலான இறுதி தீர்வை ஏற்படுத்த விரைவான நடவடிக்கையெடுக்க வேண்டும், அந்த தீர்வுக்கு இடையில்- இடைக்கால ஏற்பாடாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்- என தமிழ் கட்சிகள் அந்த ஆவணத்தில் வலியுறுத்தவுள்ளன.

ரெலோவின் முன்முயற்சியில் ஆரம்பித்த இந்த நகர்வினால், இலங்கை தமிழ் அரசு கட்சி மிகப்பெரிய ஈகோ பிரச்சனையில் சிக்கியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு அணியினர்- நாமே பெரிய கட்சி, பிறரின் முன்முயற்சியில் நடைபெறும் இந்த ஏற்பாட்டில் கையெழுத்திட கூடாது என அடம்பிடிக்கிறார்கள்.

எம்.ஏ.சுமந்திரன் அணியினர் மண்ணெண்ணெய் பட்ட பாம்பை போல அலாதுபட்டு திரிகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கோதாவில் இதுவரை அனைத்து விடயங்களையும் சுமந்திரனே கவனித்து வந்த நிலையில், அவர் இப்பொழுது பார்வையாளர் என்ற நிலைமையில் மட்டுமிருப்பதை அந்த தரப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ரணில் காலத்தில் வராத தீர்வை வருவதாக காண்பித்து, ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதன்மை உள்ளிட்ட விவகாரங்களை ஏற்று, அதை வார்த்தை ஜாலங்களினால் மக்களிடம் மழுப்பி வந்த அவர்கள், இப்பொழுது 13வதை ஏற்பது துரோகம் என, கஜேந்திரகுமார் அணியின் கொள்கைகளை ஆதரித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இப்படியான சுவாரஸ்யமான குழறுபடிகளின் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கூடவுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு கொழும்பில், இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.

நாளைய தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதா, அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவதா என்பதை தீர்மானிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

பொதுவாக இரா.சம்பந்தன் முக்கியமான முடிவுகள், ‘வரவு’ விவகாரங்களில் கட்சிக்குள் கலந்துரையாடுவதில்லை. இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே தமக்குள் விடயத்தை முடித்து விடுவார்கள்.

இப்படியான சம்பந்தன், தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழுவை கூட்டுவது- அந்த ஆவணத்தில் கையெழுத்திடாமல் இருக்கவே என கருதப்படுகிறது.

ஒருவேளை, ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லையென அரசியல்குழு கூட்டத்தில் முடிவானால், அதை உடனடியாகவே இந்திய தூதரகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பில் தகவல் தெரிவித்து, ‘கட்சி விரும்பவில்லை’ என தப்பித்துக்கொள்ள முயலலாம்.

இந்தியா விவகாரத்தில் இரா.சம்பந்தனின் முடிவுகள் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி ஒதுக்கிக் கொடுத்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்க செல்லவில்லை.

இதனால் இந்தியா கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவை மீண்டும் சீண்டக்கூடாது என்பதற்காகவே, தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் அண்மையில் கலந்து கொண்டிருந்தார்.

இந்தியா தன்னை பகைக்கக்கூடாது என்பதற்காக தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழுவை, இரா.சம்பந்தன் பகடைக்காயாக்குகிறார் என்பதே உண்மை.

இந்தியா- கூட்டமைப்பு விவகாரம் பற்றி பேசியதால் இன்னொரு சுவாரஸ்யமான கொசுறு தகவல்.

கடந்த 7,8,9ஆம் திகதிகளில் கூட்டமைப்பினரை புதுடில்லி வருமாறும், இந்திய பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும் தமிழ் பக்கம் முதலில் வெளிப்படுத்தியது. அந்த சந்திப்பு இரத்தானதையும் முதலில் வெளிப்படுத்தியது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் நடந்தவற்றை, ‘சில காரணங்களினால்’ அப்போது குறிப்பிடாமல் விட்டிருந்தோம். இப்போது, அந்த தகவல்களை தருகிறோம்.

6ஆம் திகதி புறப்பட்டு, 7ஆம் திகதி காலையில் புதுடில்லியில் சந்திப்புக்களிற்கு தயாராகுங்கள் என 1ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்திய தூதரகம் தகவல் அளித்தது. இரா.சம்பந்தனிற்கு அந்த தகவலை வழங்கி விட்டு, அன்றைய தினமே கூட்டமைப்பின் 3 கட்சி தலைவர்களிற்கும் தூதரகம் தகவல் வழங்கியிருந்தது.

அன்று இரவு எம்.ஏ.சுமந்திரனை அழைத்த இரா.சம்பந்தன், தனது கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டது என கூறினார். அந்த கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு சென்ற சுமந்திரன், ராஜபக்சக்களில் மூத்தவரான சமல் ராஜபக்சவை சந்தித்து, இந்திய பயணத்தை பற்றி குறிப்பிட்டு, இரா.சம்பந்தனின் கடவுச்சீட்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டுமென்றார்.

எம்.ஏ.சுமந்திரனிற்கும், ராஜபக்சக்களிற்குமுள்ள நெருக்கம் பற்றி அவ்வப்போது அரசல்புரசலாக செய்திகள் வருவதுண்டு. அப்படியொன்றாக இதையும் கடந்து செல்லலாம். இரவோடு இரவாக காரியம் முடிந்து, மறுநாள் காலையில் கடவுச்சீட்டு கையளிக்கப்பட்டு விட்டது.

சம்பந்தனின் கடவுச்சீட்டு பிரச்சனை சுமுகமாக தீர்ந்ததும், இரா.சம்பந்தன் அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்தார். தன்னால் தனியாக வர முடியாது, உதவிக்கு ஒருவர் தேவை. அதனால் மகளையும் அழைத்து செல்ல வேண்டுமென.

அதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, யாருடனும் ஆலோசிக்காமல், இந்திய தூதரை தொடர்பு கொண்டு, தமக்கு வேறொரு திகதியை ஒதுக்குமாறு கேட்டிருந்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம்தான் சுவாரஸ்யானது.

‘மகளின் துணையுடனே பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் மகளின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது’ என்பதே அவர் கூறிய பிரதான காரணம்.

மற்றைய இரண்டு காரணங்கள்- மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணத்தினால் அவர் கலந்து கொள்ள முடியாது, வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பவை.

இந்த மூன்றும் ‘பேய்க்காட்டல்’ காரணங்கள் என்பது இந்தியாவிற்கும் புரிந்தது.

இரவோடு இரவாக கடவுச்சீட்டை புதுப்பிக்கும் வசதியுள்ளவர்கள், தொலைந்த கடவுச்சீட்டை பெற முடியாதா என்பது இந்தியாவிற்கும் தெரிந்திருக்கும்.

அதைவிட முக்கியமானது. மாவை சேனாதிராசாவும் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒத்திவைத்தாராம். அதை சில யாழ்ப்பாண பத்திரிகையாளர்களும் நம்பி எழுதியிருந்தனர். மாவை சேனாதிராசா எம்.பியாக கூடாதென சதி நடந்த போது, அது தெரிந்தும், சதிக்கு துணை போன சம்பந்தன், மாவையையும் அழைத்துப் போக வேண்டுமென்ற உயர்ந்த மனநிலையில், சம்பந்தன் அந்த காரணத்தை சொன்னார் என நம்பியிருக்காது. ஒரு காரணமாக கண்டுபிடித்தார் என்பதை இந்திய தூதரக அதிகாரிகள் தெரிந்திருந்தார்கள்.

இந்திய பயணத்தை கூட்டமைப்பு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தியை தமிழ்பக்கம் முதலில் வெளிப்படுத்தியதும், இரா.சம்பந்தனுடன் நெருக்கமான – இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு ஒரு விளக்கமளித்திருந்தார்.

அவரது விளக்கத்தையும் தருகிறோம்.

‘இந்திய பயணத்தை ஒத்திவைக்க இரா.சம்பந்தன் சொன்ன காரணம்’சிறிய’தான தோன்றலாம். ஆனால் அவர் ஒரு முக்கிய காரணத்தினாலேயே அதை ஒத்திவைத்திருக்கிறார்.

இந்தய – இலங்கை ஒப்பந்த காலத்திலிருந்தே 13வது திருத்தத்தை ஏற்காதவர் சம்பந்தன். அது தீர்வல்ல என்பது அவரது நிலைப்பாடு. இந்தியாவிற்கு அழைத்து இம்முறை கூட்டமைப்பு தவிர்த்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக நாம் நுணுக்கமாக இந்திய பயணத்தை தவிர்த்து வருகிறோம். மோடியுடன் சந்திப்பிற்கு நேரமொதுக்குங்கள் என இலங்கை வரும் இந்திய பிரதிநிதிகளை நாம் கேட்பதாக செய்திகள் வரும். ஆனால், அந்த சந்திப்பு உருவாகாமல் பார்த்துக் கொண்டோம் என்பதுதான் உண்மை.

அதற்கு காரணமுண்டு. கடந்த ஆட்சியில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி விடலாமென நம்பினோம். அதற்காக உழைத்தோம்.

இப்பொழுதும் அப்படித்தான். வெளியில் சொல்ல முடியாத சில விடயங்கள் உள்ளன. புதிய ஆட்சியாளர்கள் எமக்கு ஒரு உத்தரவாதம் தந்துள்ளனர்.

அதன்படி, பிரிக்க முடியாத நாட்டிற்குள்- சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆட்சியிலும் இதையே எதிர்பார்த்தோம்.

இப்படியான நிலைமையில், நாம் இந்தியாவிற்கு சென்று, நரேந்திர மோடியிடம் 13வது திருத்தத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால், அரசியல் தவறாகி விடாதா?மோடியிடம் 13வது திருத்தத்திற்கு உடன்பட்டு விட்டு, பின்னர் இலங்கை வந்து, சமஷ்டி தீர்வை கேட்க முடியுமா?

மோடியிடம் நாம் சம்மதம் தெரிவித்த 13வது திருத்தத்தை உடனே அமுலாக்கி விடுகிறோம் என இலங்கை சொல்லும் அல்லவா?’ என நீண்ட விளக்கமளித்தார்.

அதாவது, ரணில்- மைத்திரி அரசு தீர்வு தரும் என கூட்டமைப்பின் தலைமை நம்பியதால், இந்திய பயணத்தை தவிர்த்து வந்துள்ளனர். ஆனால், அப்படியொரு தீர்வு வருமென கூட்டமைப்பை தவிர்ந்த வேறு யாரும் நம்பவேயில்லை.

இப்பொழுது, கோட்டா அரசு தீர்வை தருமென கூட்டமைப்பு தலைமை நம்புகிறது. அதனால் இந்திய பயணத்தை தவிர்த்துள்ளது.

அப்படியொரு தீர்வு வருமென நீங்கள் யாராவது நம்புகிறீர்களா?

13வது திருத்தத்திற்கு உடன்பட கூடாதென்பதாலேயே மோடியை சந்திப்பதை தவிர்த்தவர் சம்பந்தன். சமஷ்டி அடிப்படையிலான இறுதி தீர்வு வரும் வரையில், முதலாவது படியாக – இடைக்கால ஏற்பாடாக – 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த கோரும் ஆவணத்தில் கையெழுத்திடுவாரா? அல்லது தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழுவை பகடைக்காயாக்குவாரா என்பது இன்று தெரிந்து விடும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment