வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். கொலையாளியான, உயிரிழந்த பெண்ணின் மைத்துனர் தலைமறைவாகியுள்ளார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
நெடுங்கேணி, சேனைப்பிளவு, ஈட்டி முறிஞ்சான் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் சத்தியகலா (33) என்ற இளம்பெண்ணே சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியான கோவிந்தசாமி சிவகுமார் தலைமறைவாகி விட்டார்.
நேற்று முன்தினம் பகல் 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
தாயாரும், கொல்லப்பட்ட பெண்ணும் நேற்று மோட்டார் சைக்கிளில் நெடுங்கேணியிலுள்ள கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போதே இந்த கொலைச்சம்பவம் நடந்தது.
இந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள மண் வீதியின் ஒரு பகுதியில் வெள்ளம் தேங்கியுள்ளது. அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி தாயாரை இறக்கி விட்டு, மெதுவாக சென்றுள்ளார். அந்த பகுதியை தாயார் நடந்து கடக்க முற்பட்டார்.
அந்த இடத்திலேயே சத்தியகலா உயிரிழந்தார்.
குற்றப் பின்னணி
தற்போது தலைமறைவாகியுள்ள கோவிந்தசாமி சிவகுமார் குற்றப்பின்னணியுடையவர். உயிரிழந்த சத்தியகலாவும் அவரும் நெருங்கிய உறவினர்கள். சத்தியகலாவின் மைத்துனரே அவர். அருகருகாக அவர்களின் வீடுகள் உள்ளன.
சிவகுமார் ஏற்கனவே திருமணமானவர்.
அவரது மனைவிக்கும், பிறிதொருவருக்கும் இடையில் இருந்த உறவை அறிந்து கோபமடைந்திருந்தார். ஒருநாள் அந்த உறவை கையும் மெய்யுமாக பிடித்திருந்தார். அப்போது அவரை தாக்கி, எச்சரித்து அனுப்பியுள்ளார்.
எனினும், அந்த உறவு முடியவில்லையென அறிந்த சிவகுமார், மீண்டுமொரு முறை கையும் மெய்யுமாக பிடித்து தாக்கியுள்ளார்.
அத்துடன் நின்றுவிடாமல், அந்த நபரின் கதையையே முடிக்க திட்டமிட்டார்.
நண்பர் ஒருவர் மூலம் அந்த நபரை ஏமாற்றி அழைத்து சென்று, காட்டுக்குள் வைத்து கொலை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
சிவகுமார் கைதாகி நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.
பின்னர் தனித்தே வாழ்ந்து வந்தார். இந்த காலப்பகுதியில் அயல்வீட்டிலுள்ள மைத்துனி சத்தியகலாவுடன் நெருங்கிப் பழகியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்தான், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவகுமார் வற்புறுத்தியுள்ளார். எனினும், சத்தியகலாவிற்கு அவரை திருமணம் செய்வதில் உடன்பாடு இருக்கவில்லை.
சிவகுமாரின் வற்புறுத்தல் மிரட்டலானது.
அவரது தொல்லை தாங்க முடியாமல் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் சத்தியகலா ஒரு முறைப்பாடு செய்தார். பொலிசார் சிவகுமாரை அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.
இதன்பின்னரும் தனது இயல்பை மாற்றாத சிவகுமார், இனிமேல் பொலிசில் முறையிட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
சிவகுமாரின் அச்சுறுத்தல் அதிகரிக்கவே மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்து கொலையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள சிவகுமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.