திருவள்ளூர் அருகே ஜமீன் கொரட்டூரில்உள்ள தனியார் கப்பல் பொறியியல் கல்லூரிவளாகத்தில் உள்ள 9 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் பகுதியில் செயல்படும் செல்போன்தயாரிக்கும் தொழிற்சாலை வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த விடுதியில், செல்போன் தொழிற்சாலை ஊழியர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு விடுதியில் உணவு அருந்திய 116 பேர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை நிலவரப்படி 60 பேர் சிகிச்சை பெற்று, பாதுகாப்பாகஅவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே பொது சுகாதாரத் துறை சார்பில், விடுதி வளாகத்தில் கடந்த 2 நாட்களாகமருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாள்தோறும் இங்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதே ஊழியர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட காரணம். விடுதியின் ஒவ்வோர் அறையிலும் 10க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுகின்றனர் உள்ளிட்ட பல்வேறுகுற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஊழியர்கள் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் மதியம் 1.30 மணியளவில், விடுதி எதிரே திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல்கூறிவிட்டு, வந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததாவது:
விடுதியின் வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வின் முடிவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா விதிகளை மீறியும், உரிய அனுமதி இல்லாமலும் விடுதியில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம், ஒப்பந்த நிறுவனங்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், தொழிற்சாலை நிர்வாகி, தொழிலாளர்கள் அடங்கிய குழுவால் உரிய விசாரணை நடத்தப்பட்டு, விடுதியில்தொழிலாளர்கள் அனைவரையும் தொடர்ந்து தங்க வைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும், செல்போன் நிறுவனம், ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கு தரமான உணவு உள்ளிட்டவற்றை தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.