28.3 C
Jaffna
April 20, 2024
தமிழ் சங்கதி

வல்வெட்டித்துறையில் 50 ஆண்டுகளின் பின் திரும்பிய வரலாறு: தமிழ் கட்சிகள் ஒன்றுபட வழிகோலுமா?

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சை மிக சுமுகமாக முடிந்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் சர்ச்சையை மட்டுமல்லாமல், தற்போது தமிழ் அரசியலில் சீழ் போல பீடித்துள்ள அசிங்க அரசியலின் மத்தியில் ஒரு முன்மாதிரியையும் ஏற்படுத்தியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபையில் எந்த தரப்பும் பெரும்பான்மையை ஏற்படுத்த முடியாமல் நீண்ட குழறுபடி நீடித்துக் கொண்டிருந்தது. இதற்கு கட்சிகளின் ஆசன எண்ணிக்கை ஒரு வகையில் காரணமாக இருந்தாலும், வெளித்தரப்புக்கள் புகுந்து, விலைபோகும் உறுப்பினர்களை வைத்து வில்லங்கங்களை ஏற்படுத்தியதே முக்கிய காரணமாகும்.

உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரும் கொள்கைப் பிடிப்பானவர்கள் அல்ல. சிறிய வீதமானவர்களே அந்த வகையினர். இதற்குள் அங்கிடு தத்திகளை தேடிப்பிடித்து, குழப்பங்களை ஏற்படுத்த தென்னிலங்கை சக்திகளும், அந்த சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களும் தீயாக வேலை செய்தனர்.

வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த கோ.கருணாணந்தராசா காலமாகியதை தொடர்ந்து, புதிய தவிசாளர் தெரிவின் போது, இதுதான் நடந்தது. கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரை வளைத்துப் போட்டு, தவிசாளர் தெரிவில் கூட்டமைப்பை தோற்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் சுயேட்சைக்குழுவின் செல்வேந்திரா தவிசாளரானார். அவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டது. இன்று புதிய தவிசாளர் தெரிவு சுமுகமாக இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் குழம்பிய குட்டையை மேலும் குழப்பி, சபையை கலைய வைத்து, கோட்டா அரசின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக அரங்கேற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘விடலைகள் அணி’ தீவிரமாக முயன்றது.

வல்வெட்டித்துறை துரோகத்திற்கு இடமளிக்கும் மண் அல்ல என்பதை மீண்டும் இன்று நிரூபித்துள்ளது.

இப்பொழுது வல்வெட்டித்துறை நகரசபையிலுள்ள தமிழ் தேசிய சக்திகள் அனைத்தும் ஓரணியாகி, புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், சுமுகமாக குழப்பத்தை தீர்த்துள்ளன.

சுயேட்சைக்குழு, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி என அனைத்து தரப்புக்களும் ஒன்றித்து, புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

புரிந்துணர்வு உடன்படிக்கையில்படி அடுத்த 5 மாதங்களிற்கு சுயேட்சைக்குழுவின் செல்வேந்திரா தவிசாளராக நீடிப்பார். அதன்பின்னர் மறு தரப்பினர் தவிசாளரை தெரிவு செய்வார்கள்.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தவிசாளர் தெரிவில் ஈ.பி.டி.பி, சு.க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. ரெலோ உறுப்பினர் ஒருவர் வெளிநடப்பு செய்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கடற்தொழிலால் வர சற்று தாமதமாகி விட்டது. அவ்வளவுதான். ஏனைய அனைத்து தரப்பினரும் ஓரணியாகி, வரவு செலவு திட்டத்தை ஆதரித்தனர்.

50 வருடங்களின் முன்னைய வரலாறு

தமிழ் அரசியலில் ஏட்டிக்குப்போட்டி அரசியல் நீடித்து வந்த நிலையில் 50 வருடங்களின் முன்னர் வல்வெட்டித்துறையில் தமிழ் கட்சிகளிற்கிடையில் ஏற்பட்ட உடன்பாடுதான் பின்னர், தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணமித்து, தமிழர்களின் ஏகோபித்த குரலை பிரதிபலித்தது.

1971ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி, அப்போது இயங்கிய 4 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உடன்பாடொன்றில் கையெழுத்திட்டன. வீ.நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சிக்கழகம், சி.சுந்தரலிங்கம் தலைமையிலான ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி, இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து, அனைத்து தமிழ் கட்சிகளின் மாநாடு என்ற பெயரில் ஒன்றுகூடினார்கள். அப்போது யாழ் மாநகரசபை முதல்வர் நாகராஜா தலைமையில், வல்வெட்டித்துறையிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கூட்டம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் இருந்த மூன்று பெரியவர்களின் முன்னெடுப்பில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. ஞானமூர்த்தி, சபாரத்தினம், வேற்பிள்ளை ஆகியோரே அவர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெரிய தந்தையே ஞானமூர்த்தி. வல்வெட்டித்துறை நகரசபை தலைவராகவும் செயற்பட்டவர். புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய குமரப்பாவின் தாயின் தந்தை சபாரத்தினம்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அப்போதைய சிறிமா அரசிற்கு 9 அம்ச கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஒற்றுமை வளர்ந்து 1972 மே மாதம் திருகோணமலையில் தமிழர் விடுதலை கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் இலங்கை தமிழ் அரசு கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் இதன்பின்னர் இயங்காமல் போனது.

50 வருடங்களின் பின்னர் இப்பொழுது மீண்டும், வல்வெட்டித்துறையில் முக்கிய தமிழ் கட்சிகளிற்கிடையில் ஒருமித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை ஆக்கபூர்வமானதாக மாற்றும் சக்தி இன்றைய அரசியல்வாதிகளிடம் உள்ளதா என்பதே இப்போதைய கேள்வி.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment