ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்து இதுவரை தகவல் வெளியிட முடியாது என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதி இன்று நாட்டை விட்டு வெளியே பயணம் செய்கிறார், ஆனால் காரணங்களால் என்னால் இறுதி இலக்கையோ பயணத்தின் நோக்கத்தையோ வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் இன்று பயணம் செய்வார்” என ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை சிங்கப்பூர் சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறுவதற்கு முன்னதாக, நேற்று (12) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பாராளுமன்றம் 2022 ஜனவரி 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.