COVID-19 வைரஸின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் பரவலால் பாதிக்கப்பட்டவர்கள் உலகின் பல நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
புதிய பிறழ்வால் பாதிக்கப்பட்ட நால்வர் பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ப்ரென்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நொட்டிங்ஹாமில் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அவர்கள தென்னாபிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியின் பவேரியாவில் இருவரும்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தென்னாபிரிக்காவில் இருந்து விமானத்தில் நவம்பர் 24 அன்று மியூனிக் வந்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் நீண்ட காலம் தங்கியிருந்த இரு பயணிகளும் புதன்கிழமை பவேரியாவுக்குத் திரும்பினர். PCR பரிசோதனையில் தொற்று உறுதியானதும், நவம்பர் 25 முதல் அவர்கள் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
புதிய பிறழ்வு பற்றிய தகவல்களை தொடர்ந்து, அவர்களின் மாதிரிகள் முனிச்சில் உள்ள மேக்ஸ் வான் பெட்டன்கோஃபர் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்கப்பட்டதில், அவர்கள் ஓமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டள்ளது.
நவம்பர் 24 அன்று அதே விமானத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து வந்த பயணிகளை உடனடியாக உள்ளூர் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்குமாறு பவேரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியது.
கடந்த 14 நாட்களில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்த அனைத்து நபர்களும் தங்கள் தொடர்புகளை உடனடியாகக் குறைக்க வேண்டும், அவர்களின் பயண வரலாற்றைக் குறிக்கும் PCR பரிசோதனையை எடுக்கவும், உடனடியாக சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முதன்முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட அந்த பிறழ்வு, பெல்ஜியம், ஹொங்கொங், இஸ்ரேல் ஆகியவற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய ஒமிக்ரான் கிருமி பற்றிய அச்சம் அதிகரித்திருப்பதால் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் அதன் பக்கத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகளுக்குப் பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தற்போதுள்ள சூழலில் அதற்கு அவசியமில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளபோதும் அச்சம் நீங்கவில்லை.
தென்னாபிரிக்க நாடுகளிலிருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் தாய்லந்தும், இலங்கையும் அண்மையில் இணைந்துள்ளன.
முன்னதாக அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அத்தகைய பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன.