சபாபதி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் பீம் பட விவகாரம் பற்றி நடிகர் சந்தானம் பேசியுள்ளார்.
புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் சபாபதி. இப்படத்தில் சந்தானத்துடன் ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி புகழ், ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக பாஸ்கர் ஆறுமுகம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக லியோ ஜான் பால் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளது படக்குழு. இப்படம் வரும் 19 ஆம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சபாபதி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், ப்ரீத்தி வர்மா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஜெய் பீம் பட விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சந்தானம் பதிலளித்துப் பேசியதாவது:
ஜெய் பீம் படம் என்று இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் நம்மை உயர்த்திப் பேசுவதற்காக அடுத்தவர்களைத் தாழ்த்திப் பேசக் கூடாது. நம் கருத்தை உயர்த்திப் பேசலாம். ஆனால் அடுத்தவருடைய கருத்தை குறைத்துப் பேசக் கூடாது. சினிமா என்பது இரண்டு மணி நேரம் அனைவரும் சாதி, மதம் அனைத்தையும் மறந்து ஒன்றாக அமர்ந்து பார்க்கும் விஷயம். அதில் இது தேவையில்லாதது என்றார்.