நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விடுத்துள்ள கருத்து முரண்பாடானது என பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருளுக்காக வரிசைகள் உருவாகும் என கூட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு அரசாங்கத்திடம் இல்லாத நிலையில், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் எவ்வாறு இறக்குமதி செய்யப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து இயங்கி வருகின்ற போதிலும், நேற்றைய நிலவரப்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவில்லை என பாலித தெரிவித்தார்.
சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் நாடு 100 சதவீதம் இறக்குமதியை நம்பியிருக்கிறது என்றார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருந்தால் வாகனங்கள் வரிசையாக நிற்பது ஏன் எனவும், இருப்புக்கள் விநியோகிக்கப்படாமல் இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களை ஏமாற்றுவதில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்றும், ‘கமிஷன் மாஃபியா’ காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதில்லை என்றும் ஆனந்த பாலித கூறினார்.
அரசாங்கத்திடம் உண்மையாகவே வெளிநாட்டு கையிருப்பு இல்லை என்றால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக வரிசைகள் காணப்படும் என்று அவர் கூறினார்.
அமைச்சர் கம்மன்பிலவின் நேற்றைய கூற்று வெறும் விசித்திரக் கதை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.