முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை பிணையில் விடுவித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ் அவரது வீடு அமைந்துள்ள கொழும்பு மாநகர சபை பகுதிக்கு அவரது பயணத்தை மட்டுப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வரம்பைத் தாண்டிச் செல்ல சிஐடி இயக்குநரின் ஒப்புதல் தேவை.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மனுதாரரை ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சிஐடியினர் ரியாஜ் பதியுதீனை ஏப்ரல் 24ஆம் திகதி மீண்டும் கைது செய்தனர்.
ரியாஜ் தாக்கல் செய்த இந்த மனுவில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் தான் முன்னர் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும், எவ்வித நியாயமான காரணமும் இன்றி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றார்.
ரமழான் நோன்பு காலத்தில் தாம் சட்டவிரோதமான முறையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதிவாதிகள் 5000 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.