ஐசிசி 2021 ரி20 உலகக்கோப்பையை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இன்று சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்களால் சுலபமாக வீழ்த்தியது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றது.
தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் ஒருநாள் போட்டிகள் என நினைத்தாரோ என்னவோ, 35 பந்துகளில் மந்தமாக ஆடி 28 ஓட்டங்களை பெற்றார். அரையிறுதியில் பாகிஸ்தானை பந்தாடிய டேரில் மிட்செல் 11 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.
எனினும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஒரு பக்கத்தில் அடித்து நொறுக்கினார். 48 பந்துகளில் 10 பெளண்டரிகள், 3 சிக்சர்களுடன் 85 ஓட்டங்களை குவித்தார்.
கிளின் பிலிப்ஸ் 18, ஜேம்ஸ் நீசம் 13 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் மிட்செட் ஸ்டரக்கிற்கு போதாத காலம். 4 ஓவர்கள் வீசி 60 ஓட்டங்களை வாரி வழங்கினார். விக்கெட் இல்லை. ஹொசில்வூட் 16 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அடம் சம்பா 26 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்.
இலக்க விரட்டிய களமிறங்கிய அவுஸ்திரேலியா 15 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அணித்தலைவர் பின்ஞை இழந்தது. இவர் 5 ஓட்டங்களை பெற்றார். 2.3 ஓவர்களில் அணி 15 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வோர்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் வெளுத்து வாங்கினார். ஒரு பக்கத்தில் வோர்னர் அதிரடியாக அரைச்சதம் விளாசினார். அவர் 38 பந்துகளில் 4 பௌண்டரிகள், 3 சிக்சர்களுடன் 53 ஓட்டங்களை குவித்தார். இருவரும் 59 பந்துகளில் 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல் காட்டடி அடித்தனர்.
மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றார். ரி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். 50 பந்துகளில் 6 பெளண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த ஓட்டங்களை பெற்றார்.
கிளென் மக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றார்.
18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்று, சம்பியன் பட்டத்தை வென்றது.
பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் 18 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.