மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) சனிக்கிழமை காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மன்னார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியாவார்.
நேற்று காலை கோந்தைபிட்டி கடற்கரையில் யுவதியின் சடலம் கரையொதுங்கியது.
கடந்த வியாழக்கிழமை, மன்னார் பாலத்தில் யுவதியொருவர் நின்றதாகவும், செல்பி புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் கடலில் வீழ்ந்து சத்தம் கேட்டதாகவும் மீனவர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பலனிருக்கவில்லை.
எனினும், நேற்று சடலமொன்று கரையொதுங்கியது. மீனவர் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சடலமாக அது இருக்கலாமென்று கருதப்படுகிறது.
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட யுவதி, வியாழக்கிழமை மன்னார் பிரதேச பேருந்து தரிப்பிடத்தில் இளைஞன் ஒருவருடன் வரும் காட்சிகள் சிசிரிவி காணொளியின் ஊடாக அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில், காணாமல் போன தமது மகள்களை தேடி சிலர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர். தற்போது, யுவதியின் சகோதரன் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பம் தற்போது, மன்னார் மூன்றாம்பிட்டியில் வசிப்பதாகவும், யுவதி மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுவதியின் சகோதரனின் வாக்குமூலம் தற்போது பொலிசாரால் பெறப்பட்டு வருகிறது. இதன்பின்னர், சடலத்தை அடையாளம் காண அவர் அழைத்து செல்லப்படுவார்.
சிசிரிவி காணொளியில் பதிவாக காட்சிகளில், யுவதியுடன் காணப்பட்ட இளைஞனை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.