காரைநகர் கிராமத்தில் பெளத்த அடையாளங்கள் இருந்ததாக கூறி, அந்த இடத்தை பார்வையிட சென்ற இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
கிராமத்தில் பெளத்த தூபி இருந்ததாக கூறி, நேற்று மாலை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பார்வையிட சென்றனர்.
அந்த பகுதியில் பௌத்த தூபி இருந்ததாகவும், அதற்கான புகைப்படம் இருந்ததாகவும் கூறினர்.
எனினும், பிரதேச மக்கள் அந்த இடத்தில் அப்படியொரு தூபி இருக்கவில்லையென்றும் கூறினர். 2012 ஆம் ஆண்டளவில் அங்கு தூபி இருக்கவில்லையா?, பின்னர் உடைக்கப்படவில்லையா என அமைச்சர், அங்கஜன் தரப்பினர் துருவி துருவி வினவினர்.
எனினும், அதை மக்கள் மறுத்தனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் வைத்தியர் ஒருவர், அந்த காணியின் உரிமையாளரென கூறி, தொல்பொருள் ஆய்விற்கான அனுமதியை தந்துள்ளதாக அமைச்சர், அங்கஜன் தரப்பினர் கூறினர்.
எனினும், அந்த காணி தம்முடையதென மூதாட்டியொருவர் ஆவணங்களை காண்பித்தார்.
காணி உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென்றும், அந்த பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் மீட்கப்பட்டால் பிரதேசத்திற்கே பெருமை, சுற்றுலா பயணிகளின் வருகையால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என அரச தரப்பு கூறியது.
பின்னர் அங்குள்ள தொல்லியல் எச்சமென கூறி ஒரு கல்லை பார்வையிட்டனர்.
அந்த கல் தொல்லியல் சின்னமல்ல, வீட்டுத் திட்டத்திற்காக பறிக்கப்பட்ட கல் என பிரதேச மக்கள் கூறினர்.
பின்னர், மற்றொரு கல்லை காண்பித்து தொல்லியல் சின்னமென கூறினர்.
எனினும், பிரதேச மக்கள் அங்கு தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
கடந்த காலத்தில் தொல்லியல் ஆய்வுகளால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தப்பட்டது என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக அங்கு விகாரை கட்டப்படாது என்றும், அடுத்த முறையும் இங்கு வருவேன் என்றும், அப்போது தனக்கு தவறாமல் வடை செய்து தருமாறும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.