தமிழ் சங்கதி

தமிழ் தரப்பின் சந்திப்பை தடுக்க தீயாக முயற்சி: போக வேண்டாமென போன் போட்டும் கேட்ட தமிழ் அரசு கட்சி பிரமுகர்!

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நேற்று (2) யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.

அடுத்த இரண்டு வாரங்களிற்குள் மீண்டும் சந்தித்து பேச, இதன்போது முடிவு எட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்குகூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி ஆகியன சார்பில் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகியன கலந்து கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டு முயற்சிகளில் பங்கேற்பதில்லை.  அவர்கள் கலந்து கொள்ளாததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி  கலந்து கொள்ளாததற்கு பின்னணியில் பல தகிடுதத்தங்கள் உள்ளன. இந்த கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி கலந்து கொள்ளாமல் விட்டதற்கு இனிமேல் பல தத்துவார்த்த, கொள்கை விளக்கங்கள் அளிக்கக்கூடும்.

ஆனால், தமிழ்அரசு கட்சி இழுத்துப் போர்த்த நினைக்கும் திரைககு பின்னால் நடந்த சம்பவங்களை தருகிறோம்.

‘பெரிய அரசியல் இலட்சியங்களை அடைய முயற்சிக்கும் நாம், 13வது திருத்தத்தை வலியுறுத்தும் கொள்கைத் தவறை புரிய மாட்டோம்’ என இனி தமிழ் அரசு கட்சி சொல்லக்கூடும்.

ஆனால், உண்மை அதுவல்ல.

அண்மைக்காலமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை குறிவைத்து, மகா நடிகனாக உருமாறி, போட்டோசூட் அரசியலில் இறங்கியுள்ள ஒரு தமிழ் அரசு கட்சி பிரமுகரே, தமிழ் அரசு கட்சியின் பங்கேற்பை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்த பின்னர், இரா.சம்பந்தனை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன், அனைத்து விடயங்களையும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பை இரா.சம்பந்தன் தான் தலைமையேற்க வேண்டுமென்றும்  செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, நுணுக்கமாக எல்லா விடயங்களை இரா.சம்பந்தன் கேட்டறிந்துள்ளார்.

தரை வழியாக பயணிப்பது சிரமம் என்பதால், பலாலி விமான நிலையம் ஊடாக தான் வருவதாகவும் உத்தரவாதமளித்திருந்தார்.

எனினும், அதன் பின்னர் இரா.சம்பந்தனின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அவர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

சம்பந்தனின் திடீர் முடிவு மாற்றத்திற்கு, தமிழ் அரசு கட்சியின் முடிவுகளை எடுக்கவல்ல ஒரு பிரமுகர்தான் பின்னணியில் இருந்திருக்கலாமென கருதப்படுகிறது.

ஏனெனில், இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாமலிருக்கும்படி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் அந்த பிரமுகர் தொலைபேசியில் வலியுறுத்தியதாக தகவல். எனினும், மனோ அதற்கு இடமளிக்கவில்லை.

இந்த அடிப்படையில் பார்த்தால், இரா.சம்பந்தனின் திடீர் முடிவு மாற்றத்திற்கு யார் காரணமென்பதை ஊகிக்க முடியும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில், இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கூட்டு முடிவின் அடிப்படையில்தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென்று கூறப்பட்டது.

ஆனால், தமிழ் அரசு கட்சியின் இந்த வகையான கூட்டங்கள், மேலே குறிப்பிட்ட அந்த பிரமுகரின் அபிப்பிராயத்தை மீறி தீர்மானங்களை எடுக்கும் சக்தியற்றவை என்பதை கவனத்தில் கொண்டால், பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

தமிழ் தேசிய அரசியலில் அதிகம் பிளவை ஏற்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டு அந்த பிரமுகர் மீதுண்டு. இது ஒற்றுமை முயற்சியல்லவா? இது பொருந்ததாத கூட்டமல்லவா?

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

ஸ்டாலினுக்கு வந்த சோதனை: வேலன் சுவாமி தலைமையிலும் ஒரு குரூப் தயாராகிறது!

Pagetamil

‘மகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது’; மோடியை சந்திப்பதை தவிர்க்க சம்பந்தன் சொன்ன காரணம்: இன்று பகடையாகிறதா தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு?

Pagetamil

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச ‘பெர்மிசன்’ கேட்ட கூட்டமைப்பு எம்.பி: கிடைக்காததால் கடைசி வரை ‘கப்சிப்’!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!