யப்பான் தலைநகர் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு, ரயில் பாதையில் பேட்மேனின் ஜோக்கர் உடை அணிந்த ஒரு நபர் பயணிகளைத் தாக்கினார், ஹாலோவீன் நிகழ்வுகளுக்காக நகர மையத்திற்குச் சென்ற17 பேர் காயமடைந்தனர்.
இதில் 70 வயதான ஒருவர் படுகாயமடைந்ததாகவும், பயணிகளை கத்தியால் குத்திய பின்னர், எண்ணெய் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாகவும் யப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டோக்கியோ , கோகுரியோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கியோ ரயிலுக்குள் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கியோட்டா ஹட்டோரி என தன்னை அடையாளப்படுத்திய 24 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நோக்கம் உடனடியாக தெரியவில்லை.
பல தீயணைப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் பயணிகளைக் காப்பாற்றுவதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின, அவர்களில் பலர் ரயில் ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பியோடினர்.
ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில், சந்தேகநபர், காலியான ரயிலில் அமர்ந்து சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு, அவரது கால்களைக் குறுக்காகக் கொண்டு அமைதியாக இருப்பதைக் காட்டியது. அவர் சட்ட அமலாக்கப் பிரிவினரால் சூழப்பட்டிருப்பதை அடுத்த கிளிப்பில் ஜன்னல் வழியாகக் காணலாம்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “மக்களை கொல்ல விரும்புவதாகக் கூறினார், அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்”. என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு மாதங்களில் டோக்கியோ ரயிலில் கத்தியால் குத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஓகஸ்ட் மாதம், டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு முந்தைய நாள், டோக்கியோவில் 36 வயதுடைய நபர் ஒருவர் டோக்கியோவில் பயணிகள் ரயிலில் 10 பயணிகளை கத்தியால் குத்தினார். மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களை தாக்க விரும்புவதாக சந்தேக நபர் பின்னர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.