ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ. அன்ஸாரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் DGHS Covid-19/347/2021 ஆம் இலக்க 21.10.2021 ஆம் திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஒப்புதலின் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடான ஜும்ஆத் தொழுகையினை மாத்திரம் நடாத்துவதற்கு பின்வரும் கட்டாய நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரகாரம் இலங்கை வக்பு சபை அனுமதியினை வழங்குகின்றது.
1. இந்த அனுமதியானது ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளிவாசலிலும் இதற்காக எல்லா நேரத்திலும் கலந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
2. தொழுகையின் ஒரே ஒரு அமர்வு (வக்து) மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது.
3. ஒரு வரிசை இடைவெளி விட்டு (ஒவ்வொரு மற்ற வரிசையிலும்) தொழுகைகள் நடாத்தப்படல் வேண்டும்.
4. முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளி பேணல், சொந்தமான தொழுகை விரிப்பினை எடுத்து வருதல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு வருதல் என்பன கட்டாயமானதாகும்.
5. சுகாதார / பாதுகாப்பு தரப்பினரின் ஏனைய அனைத்து விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் வக்பு சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
6. வேறு எந்த கூட்டு வணக்க வழிபாடுகள் அல்லது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பிரகாரம்இ எந்தவொரு பள்ளிவாசலிலும் ஏனைய தொழுகைகள், குர்ஆன் மஜ்லிஸ், நிகாஹ் மஜ்லிஸ் போன்றவைகளுக்கு இந்த ஒப்புதல், அனுமதியானது நீக்கப்படமாட்டாது.
7. பள்ளிவாசல்களில் ஏனைய அனைத்து தொழுகைகளையும் தனியாக தொழுவதற்கு மாத்திரம் எல்லா நேரத்திலும் 25 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
8. பள்ளிவாசல்களில் உள்ள வுழூச் செய்யும் பகுதி மற்றும் கழிப்பறைகள் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
9. தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் அவ்வாறான தனிமைப்படுத்தல் மட்டுப்படுத்தல் காலம் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
10. மேற்குறிப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லை என கருதும் நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்கள் ஜும்ஆத் தொழுகையை நடாத்தாமல் விடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
11. மேலுள்ள அல்லது ஏனைய கொவிட் 19 வழிகாட்டுதல்களில் ஏதேனும் மீறல்கள் இடம்பெற்றால் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மிகக் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.