கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 3 பேரும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி மாலை இந்த வன்முறை சம்பவம் நடந்தது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் 58 வயதான ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவதற்காக சிலரை அழைத்து இந்த அடாவடியில் ஈடுபட வைத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது.
அயலிலுள்ள இளைஞனும், நண்பர்களும் மது அருந்தி விட்டு, பியர் ரின்களை தமது வீட்டு வளவிற்குள் எறிவதுடன், வீட்டுக்கு கல்வீசுகிறார்கள் என்பதே வீட்டு உரிமையாளரின் குற்றச்சாட்டு.
வீட்டு உரிமையாளரும், அயலிலுள்ள இளைஞனும் பின்னர் சமரசமான விடயம் தெரிய வந்தது.
எனினும், அயலிலுள்ள இளைஞனின் நண்பர் ஒருவரிடமும் வீட்டு உரிமையாளர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். வன்முறை சந்தேகத்தில் அந்த இளைஞனும் தற்போது கைதாகியுள்ளார்.
அந்த இளைஞனிற்கு ஆவா குழுவுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. வன்முறை சம்பவத்தை தானே நடத்தியதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
தமது வீட்டுக்கு கல் வீசியது நீங்களா என வீட்டு உரிமையாளர் தன்னுடன் தர்க்கப்பட்டதால், ஆத்திரத்தில் இந்த வன்முறையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள ஏனைய 9 பேரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.