உரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்காவிடின், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள உரப் பிரச்சினையை இந்த அரசாங்கம் மிகவும் குழப்பகரமாக மாற்றியுள்ளது. விவசாயிகளின் உரப் பிரச்சினை நெல் உற்பத்திக்கு மாத்திரமின்றி தேயிலை, பழவகைகள், மரக்கறி உள்ளிட்ட அனைத்து உற்பத்திகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது உரத்தைக் கோரியே அன்றி, அரசாங்கத்துக்கு எதிராக அல்ல. அதனை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மாற்ற அரசாங்கமே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
உரப் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் எடுத்துக் கொண்ட காலம் அதிகம். இதன்மூலம் அரசாங்கத்தின் தோல்வி காட்சிப்படுத்தப்படுகின்றது. எனவே, இன்னும் விவசாயிகளின் உரப் பிரச்சனையை தீர்க்க, விவசாயத்துறை அமைச்சர் காலம் தாமதித்தாரானால் அவரது செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு, அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நேரிடும். நாங்கள் அப்படி செய்யாவிடின் அது மக்களுக்கு செய்யும் அநீதியாகும்.
நாட்டு மக்களுக்கு இருக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தீர்மானித்தோம். அரசாங்கமும் அமைச்சரும் பொறுப்பின்றி செயற்படுவதை நாட்டு மக்களுக்கு உணர்த்தவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகிறோம். இது எதிர்க்கட்சியின்
பொறுப்பாகும் என்றார்.