தடைசெய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் குழுக்களுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்படாத அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
அண்மையில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் பிரச்சனைகள் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தற்போது அரசின் சுருதி மாறியுள்ளது. கொழும்பில் ஊடகமொன்றிற்கு பேட்டியளித்த வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், உலகத் தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரவை (GTF), பிரிட்டிஷ் தமிழர் பேரவை (BTF), கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), கனேடிய தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாகும்.
“இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் நாங்கள் பேச முடியாது. இது சாத்தியமில்லை, ஏனென்றால் அது எங்கள் சட்டத்தை மீறுவதாகும். ஆனால் மற்ற தரப்புக்கள் உள்ளன. எனவே, அவர்களுடன் பேசுவது பயனுள்ளது” என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.
நல்லிணக்க செயல்முறையின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல குழுக்கள் மற்றும் நபர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமரின் அழைப்பின் பேரில் COP26 கலந்துரையாடலில் பங்கேற்க செல்லும் ஜனாதிபதி கோட்டாபய, நாடு திரும்பியதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் என தெரிவித்தார்.
“எனவே அது என்ஜிஓ சமூகமாக இருந்தாலும் அல்லது புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது இலங்கையில் உள்ள பாராளுமன்ற அமைப்பாக இருந்தாலும் சரி. அவர்கள் அனைவருடனும் நாங்கள் பேச்சில் ஈடுபட விரும்புகிறோம், அதுதான் முன்னோக்கி செல்லும் வழி, ”என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
புலம்பெயர் சமூகத்துடன் பேச தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததும், முதல் தரப்பாக உலகத் தமிழர் பேரவை அதை வரவேற்று, பேச்சில் ஈடுபட விரும்புவதாக குறிப்பிட்டது. கடந்த மைத்திரி- ரணில் அரசிலும் இரகசிய தொடர்பை ஏற்படுத்தி, உலகத் தமிழர் பேரவையினர் இலங்கைக்கு விடுமுறைக்கு வந்து சென்றிருந்தனர்.