எதிர்வரும் திங்கட்கிழமை கமநல சேவைகள் திணைக்களங்களின் முன்பாக குறைந்தது 5 பேரையாவது வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தனிவழி செல்ல முயல்கிறார்கள், கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகங்கள் வலுவடைந்து வரும் நிலையில், அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் எம்.ஏ.சுமந்திரன் அணி 18ஆம் திகதி ஒரு போராட்டத்தை அறிவித்தது.
வடக்கு கிழக்கிலுள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடக்குமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். அது தொடர்பான அறிவித்தல்களில், எம்.ஏ.சுமந்திரனின் அழைப்பில் நடக்கும் போராட்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் அறிந்திருக்கவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் அறிந்திருக்கவில்லை. தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரான சாணகியன், கலையரசன் போன்றவர்களை தவிர்ந்த மற்றையவர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை.
எம்.ஏ.சுமந்திரன், கிழக்கில் போராட்டம் நடத்தும் அறிவித்தலை தொலைபேசியில் சாணக்கியன், கலையரசனிற்கு வழங்கினார்.
மட்டக்களப்பில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் கூடியபோது, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது பற்றி சிலரால் கேட்கப்பட்டது. யார் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது என ஏனைய சிலரால் கேள்வியெழுப்பப்பட்ட போது, “அது விவசாயிகள் அழைப்பு விடுத்த போராட்டம்“ என எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் நிலைமையை சமாளித்தனர். அதை நம்பிய ஏனைய தரப்பினரும், போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இவ்வாறு முடிவெடுத்தாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளின் தலைவர்களும் இவ்வாறான போராட்ட அழைப்பை அறிந்திருக்கவில்லை, அவர்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லையென அறிய முடிகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் எல்லா கமநல சேவைகள் நிலையங்களின் முன்பாகவும் போராட்டத்தை நடத்தினால், மாகாணசபை தேர்தல் சமயத்தில் வேட்பாளர் பேரத்திற்கு சாதகமான நிலைமையிருக்கும், கூட்டமைப்பிற்குள் உடைவை ஆழப்படுத்தி தமது அணி பற்றிய பிம்பத்தை இன்னும் வலுப்படுத்தலாமென எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் கருதுகிறார்கள்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சியிலுள்ள கமநல சேவைகள் திணைக்கங்களின் முன்பாக போராட்டம் நடத்துவதற்கு, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்பக்கத்துடன் பேசும்போது, “குறைந்தது 5 பேரையாவது அழைத்து வந்து- குடும்ப உறுப்பினர்கள், அயலவர்கள் என்றாலும் சரி- போராட்டத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது“ என்றனர்.