காபூல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து முடித்துப் பதவியில் இருந்த துணைவேந்தரை நீக்கி அப்பதவியில் பி.ஏ. படித்தவரைத் தலிபான்கள் அமரவைத்துள்ளனர்.
புதன்கிழமையன்று காபூல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒஸ்மான் பாபூரியை (பிஎச்டி படித்தவர்) நீக்கி பி.ஏ. படித்த முகமத் அஷ்ரப்பை நியமித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காபூல் பல்கலைக்கழகத்தில் சுமார் 70 ஆசிரியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், புதிய நியமனத்தை எதிர்த்துப் போராட்டங்களையும் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அவர்கள் பதவி ஏற்றது முதலே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், ”ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான் ஆட்சியாளர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அங்கீகாரத்தையும், உதவியையும் பெற விரும்பினால் அவர்கள் மிகவும் உணர்வுமிக்கவர்களாகவும், சர்வதேச கருத்து மற்றும் நெறிமுறைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். தலிபான்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.