ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது.
அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய நடைமுறை, சுற்றுச்சூழலுக்குச் சிறந்தது. பயனீட்டாளர்களுக்கும் வசதி என்பது அவர்களின் கருத்து.
முன்மொழிவின் படி, யூ.எஸ்.பி-சி இணைப்பு அனைத்து ஸ்மார்ட்போன்கள், டப்லட்டுகள், கமராக்கள், ஹெட்ஃபோன்கள், கையடக்க ஸ்பீக்கர்கள் மற்றும் கையடக்க வீடியோ கேம் சாதனங்களிற்கான நிலையான சார்ஜராக மாறும்.
அதேவேளை, சார்ஜர்களும் மின்னணு சாதனங்களிலிருந்து தனித்தனியாக விற்கப்பட வேண்டும்.
ஆனால், ஒரே வகை சார்ஜர் திட்டம், புத்தாக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்று அப்பிள் குறிப்பிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2018 இல் மொபைல் போன்களுடன் விற்கப்பட்ட பாதி சார்ஜர்களில் USB மைக்ரோ-பி இணைப்பு இருந்தது.
29 வீத போன்களுடன் USB-C கனெக்டர் மற்றும் 21% லைட்னிங் கனெக்டர் இருந்தது. சார்ஜர் வேறுபாடு பயனர்களை சிரமப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துமென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடுகிறது.
இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்களின் ஒப்புதல் தேவை. அது கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும்.