கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக தேர்வு செய்ய்யப்படாலும் நாடாளுமன்றத்தில் அவரது லிபரல் கட்சிக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2019 தேர்தல் முடிவுகளை ஒத்த முடிவுகளையே, நேற்று நடந்த தேர்தல் முடிவுகளும் ஒத்துள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளின் துணையுடனேயே அவர் ஆட்சியமைக்க வேண்டும்.
2015 இல் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் அவர் பிரதமரானார். அதன்பிறகு 2019 இல் நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்கள் கிடைக்காமல், 155 இடங்களை மட்டுமே லிபரல் கட்சி கைப்பற்றியது. இதனால் வேறு கட்சிகளின் ஆதரவுடன் அவர் இரண்டாவது முறையாக பிரதமரானார்.
இரண்டு வருடங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேர்தல் நேற்று நடந்தது.
தற்போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி உலகிலேயே சிறந்த முறையில் தடுப்பூசி திட்டத்தை மேற்கொண்ட நிலையில், மக்களிடம் ஆதரவு அதிகரித்திருக்குமென்ற நம்பிக்கையில் 2023 ல் நடக்க வேண்டிய தேர்தலை முன்னதாகவே அவர் நடத்தினார்.
எனினும், லிபரல் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும், கடந்த முறையை போன்ற நிலைமையே அமைந்துள்ளது.
கடந்த முறை லிபரல் கட்சி 155 ஆசனங்களை வென்றது. தற்போது 156 தொகுதிகளில் வெற்றி அல்லது முன்னிலை வகிக்கிறது.