27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மதுபோதையில் நுழைந்து துப்பாக்கியை லோட் செய்தார்; தற்போது இரண்டு கைதிகள் ‘தயார்ப்படுத்தப்படுகிறார்கள்’?: கைதிகளை சந்தித்த பின் மனோ கணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை லோட் செய்து தமிழ் அரசியல் கைதிகள் மீது அடாவடித்தனம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே என வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

இன்று (18) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.

இரண்டு கைதிகளை சரிப்படுத்தி, தயார்ப்படுத்தி சாட்சி சொல்ல வைக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக ஒரு சந்தேகம், தகவல் வந்தது. அதை தேடிப்பார்த்தோம். அப்படியொரு நிலைமை உள்ளதாக நாங்கள் உணர்கிறோம் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.

மனோ கணேசன், காவிந்த ஜயவர்த்தன், ரோஹண பண்டார ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றனர். தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் சந்திக்க விரும்பிய போதும், அவர்களிற்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதில் அவர்கள் விடாப்பிடியாக நின்றனர். அங்கு நீண்ட தர்க்கம் உருவானது. பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை தொடர்பு கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமது சிறப்புரிமை மீறப்படுவதை சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து அவர்களிற்கு சிறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

சிறைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர், சிறைச்சாலைக்கு வெளியில் ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன் எம்.பி,

“இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நானும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தனவும், அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் ரோஹண பண்டாரவும் இணைந்து, சில தினங்களின் முன் இங்கு நடந்த அசம்பாவிதங்களை ஆராய வந்தோம்.

இங்கு வருவதாக நேற்று சிறை அதிகாரிகளிற்கு தகவல் அனுப்பியும், இன்று இங்கு நாங்கள் வந்தபோது தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களான எமது சிறப்புரிமையை மீறும் செயல்.

இங்கிருந்து சபாநாயகரை தொடர்பு கொண்டு முறையிட்ட பின்னர்தான் எமக்கு கதவு திறக்கப்பட்டது.

சாபாநாயகர் தொடர்பு கொண்டு சொன்ன பின்னர்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைகளில், பொலிஸ் நிலையங்களில் கைதிகளை சந்திக்க முடியுமென்றால், நாட்டில் எவ்வளவு தூரம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று இங்கு கதவு திறக்கப்படாமலிருந்தால் நாங்கள் இங்கு உண்ணாவிரதம் இருந்தாவது அரசியல் கைதிகளை சந்தித்திருப்போம். ஏனெனில், உள்ளேயிருப்பது எமது மக்கள். உடன்பிறப்புக்கள். இரத்தத்தின் இரத்தங்கள். அவர்கள் உள்ளேயிருந்து துன்பப்படும் போது, கண்ணீர்விடும்போது, அதை துடைக்கும், துணையிருக்கும் கடமை எமக்குள்ளது. அதனால்தான் இங்கு வந்தோம்.

உள்ளே சென்ற போது, கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரத்வத்தை என்ற அமைச்சர் மதுபோதையில், துப்பாக்கியுடன் வந்தார் என்பதை அங்குள்ள சிறைக்கைதிகள் எங்கள் மூவரிடமும் கூறினார்கள். மதுபோதையில் துப்பாக்கியை எடுத்து “லோட்“ செய்ததாக ஒரு சிறைக்கைதி சொன்னார். சற்று பிசகியிருந்தால் அது வெடித்திருக்கும். அப்படி நடந்திருந்தால், விடுதலைப்புலி சந்தேகநபர்கள் தாக்க முயன்றார்கள், அதனால் கலவரம் நடந்தது என கதை கட்டியிருப்பார்கள் என அந்த கைதி எம்மிடம் சொன்னார்.

இந்த சம்பவத்தின் பின் அமைச்சர் நாமல் ராஜபக்ச இங்கு வந்தார். கைதிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு வந்தார் என சொன்னார்கள். பரவாயில்லை, நாமல் ராஜபக்சவிற்கு ஒன்றை சொல்கிறேன். தயவு செய்து இந்த கைதிகளை விடுதலை செய்யுங்கள். இனி போதும்.

எமது ஆட்சிக்காலத்தில் சுமார் 50 அரசியல்கைதிகளை விடுதலை செய்தோம். முழுமையாக முடிக்க முடியாமல் போய்விட்டது. நீங்கள் அதை முடியுங்கள்.

அவர்களை விடுவித்து தமிழ் மக்களின் மனங்களை வெல்லுங்கள் என நாமல், கோட்டா, மஹிந்த, பசிலுக்கு சொல்ல விரும்புகிறேன்.

உள்ளே இரண்டு கைதிகளை சரிப்படுத்தி, தயார்ப்படுத்தி சாட்சி சொல்ல வைக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக ஒரு சந்தேகம், தகவல் வந்தது. அதை தேடிப்பார்த்தோம். அப்படியொரு நிலைமை உள்ளதாக நாங்கள் உணர்கிறோம்.

இருந்தாலும், கைதிகள் காப்பற்றப்பட வேண்டும். விடுவிக்கப்பட வேண்டும்.

அங்குள்ள கைதிகள் முதலில் தமது பிரதேசங்களிற்கு மாற்றப்பட வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன் சென்று இதை முறையிடவுள்ளோம்“ என்றார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரை, அநுராதபுரம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க முயற்சிக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறைக்கு சென்ற போதும், அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததும், திரும்பி வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி அனுரவின் இந்திய பயண விபரம்!

Pagetamil

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

Leave a Comment