28.6 C
Jaffna
September 27, 2021
இலங்கை

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுட்டிக்காட்டுகிறார் சிறிதரன் எம்.பி!

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் மிலேச்சத்தனமான செயற்பாடு இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2021.09.12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள், தனது நண்பர்களுடன் மதுபோதையில் நுழைந்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட்டு அமரச் செய்ததோடு, சுட்டுக்கொல்வேன் என கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டிய செயற்பாடு, இந்த அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் செயலாகவே அமைந்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர், கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு ஹெலிகெப்டரில் பயணித்து, தனது நண்பர் குழாமுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததோடு, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிலேச்சத்தனமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும். இச் செயற்பாடானது, இந்த நாட்டின் சட்டம், நீதி, இனநல்லிணக்கம் என்பவற்றை கேள்விக்குட்படுத்துவதோடு, கடந்தகாலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்புச் சம்பவங்களை மீள நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1983 ஆம் ஆண்டு கொழும்பின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 2000.10.25 ஆம் திகதியன்று மத்திய மாகாணத்தின் பிந்துனுவேவா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர.; 2012.07.04 ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் பொலிசாராலும், இராவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சிறைச்சாலைப் படுகொலைகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகளை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத் தொனியோடு, இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளமை, தமிழ் அரசியற் கைதிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்களவர்களோடான நல்லிணக்கத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு இதயசுத்தியோடு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தி வரும் சர்வதேசம், நல்லிணக்கத்தை அடியோடு ஆட்டம் காண வைக்கும் இத்தகையை இனவன்முறைகள் குறித்தும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என இந்தச் சந்தர்ப்பதில் நான் கோரிக்கை விடுக்கிறேன். இந்த நாட்டின் ஜனாதிபதி நீதித்துறையின் சுயாதீனத்தைப் பேண வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால் இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, முறையான நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மக்கள் முன் செல்ல பயந்து மாகாணசபை தேர்தலை ஒத்திவைக்க கூட்டமைப்பும் ஒத்துழைத்தது!

Pagetamil

தொலைபேசியில் இப்படி மிரட்டல் வந்தால் ஏமாறாதீர்கள்!

Pagetamil

வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!