27.4 C
Jaffna
August 12, 2022
இந்தியா

3,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்கோடாரி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம், மங்கள நாடு கிராமத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்பலத்திடலில் ஏராளமான தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் குழுவினருக்குத் தகவல் கிடைக்க, கடந்த 2019ம் ஆண்டு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் தொன்மைப் பயணமாக அம்பலத்திடலுக்குச் சென்றனர்.

அங்கு கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. அதோடு, முதுமக்கள் தாழிகளும் ஏராளம் புதைந்து கிடப்பது தெரியவந்தது. இவை அனைத்தையும் சேகரித்தனர். இதற்கிடையேதான் தொல்லியல் ஆய்வுக் குழுவினருடன் சென்ற கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் திருக்குறள் அரசன் தற்போது வயது (13) அங்குக் கிடந்த கற்கோடாரியைக் கண்டறிந்து தொல்லியல் ஆய்வுக் குழுவினரிடம் ஒப்படைத்தார்.

அதனை ஆய்வு செய்த ஆய்வுக் குழுவினர், அதன் அமைப்பு முறையை வைத்துப் பார்க்கும்போது, அது புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரி என்பதை உறுதிப்படுத்தினர்.

அறந்தாங்கி பகுதியில் இந்த கற்கோடாரி கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதை அப்போதைய அறந்தாங்கி வட்டாட்சியர் சூர்யபிரபுவிடம் ஆய்வுக் குழுவினர் ஒப்படைத்தனர். கடந்த 2019ல் பள்ளி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரி, கடந்த 2020ல் புதுக்கோட்டை மியூசியத்தில் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு தற்போது 2021 செப்டம்பர் 1ம் தேதி முதல் புதுக்கோட்டை மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இந்த கற்கோடாரியைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வுக் குழுவினரிடம் கேட்டபோது,

‘தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிம கற்கால கருவியான கற்கோடாரி எங்கள் கணிப்பின்படி 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறோம். மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கற்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இது 122 கிராம் நிறையுடன், 8.6 செ.மீ நீளமும், 3.4 செ.மீ அகலத்துடன் கூர்மையான பகுதியும், 1.1 செ.மீ அகலத்தில் அடிப்பகுதியும் கொண்டுள்ளது. இது குவார்ட்சைட் எனப்படும் கருங்கல் வகையைச் சேர்ந்த கற்கருவியாகும். இதன் கீழ்ப்பகுதியை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி கூர்மையாக்கியுள்ளனர். வெட்டும் பகுதியின் ஒருபுறம் உடைந்துள்ளது. கருவியை அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

இதை மரத்தாலான தடியில் கட்டி ஆயுதமாகவும், பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது தொல்லியல் சின்னங்களைக் கண்டறிவது ஆய்வு செய்வது குறித்து அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறோம். மாணவர்களும் தற்போது பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். அந்த வகையில்தான், எங்கள் தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர், வரலாறு பேசும் இந்தக் கற்கோடாரியைக் கண்டுபிடித்து எங்களை நெகிழவைத்துள்ளார். அவை காட்சிப்படுத்தும் அளவிற்குச் சென்றுள்ளது. தொடர்ந்து, மாணவர்கள் பலரும் தொன்மையைத் தேடவும், பாதுகாக்கவும் முன்வர வேண்டும்” என்றனர்.

இதுபற்றி புதுக்கோட்டை அருங்காட்சியகக் காப்பாட்சியர் பக்கிரிசாமி கூறும்போது,

“ஒவ்வொரு மாதமும் நம் அருங்காட்சியகத்தில் அரிய பொருளைக் காட்சிக்காக வைத்து வருகிறோம். அதன்படி, இந்த மாதத்திற்கு புதிய கற்கால கற்கோடாரியைக் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்தக் கோடாரி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு கடந்த 2020ல் அருங்காட்சியகத்திற்குக் கிடைத்தது. அரிய பொருளான இதை தற்போது காட்சிப்படுத்தியுள்ளோம்.

புதிய கற்காலத்தின் காலம் சுமார் 10,000 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் அந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்த தொழில்களை அறிந்திருந்துள்ளார்கள். காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய கற்கால கற்கோடாரி சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 58,419 பேருக்கு தொற்று!

divya divya

2 ஆண்டுகளாக காயத்துடன் சுற்றி திரியும் யானை!

divya divya

இந்தியா வேகமாக வளர்ச்சி அடைய புதிய திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!