இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி, ஹீன் மெனிகேவின்இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார்.
64 வயதான அவர், நீண்ட காலமாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு பின்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
உயிரிழந்த மனைவியின் உடலை அடையாளம் காணவும், பிரேத பரிசோதனைக்கு உதவவும் மற்றும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் தனிமைப்படுத்தல் விதிகளின் படி ஆதிவாசி தலைவர் நேற்று முன்தினம் (05) பேராதனை போதனா மருத்துவமனைக்கு சென்றார்.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் சடலம் மஹியங்கனைக்கு கொண்டு வரப்பட்டு மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு பூர்வீக சடங்குகளைத் தொடர்ந்து உடல் தகனம் செய்ய ஒப்படைக்கப்பட்டது.
ஆதிவாசியொருவர் உயிரிழந்தால், உடலை ஒருவகை மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துப் பெட்டியில் உடலைப் புதைப்பது பாரம்பரிய வழக்கம். ஆதிவாசிகள் சடலங்களை எரிக்கப்பதில்லை. இருப்பினும், கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஹீன் மெனிகாவின் உடல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி எரிக்கப்பட வேண்டியிருந்தது.
ஆதிவாசியொருவர் உயிரிழந்தால், அவரது ஆன்மாவுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். ஒருவர் உயிரிழந்தால் அவரது ஆவி தொடர்ந்து சுற்றித்திரியும், அது கெட்ட ஆவியாக மாறக்கூடாது, ஏனையவர்களிற்கு கெடுதல் செய்யக்கூடாது என்பதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த சடங்கின் மூலம் உயிரிழந்தவரின் ஆன்மாவை மகிழ்ச்சியடைய வைக்கலாமென ஆதிவாசிகள் நம்புகிறார்கள்.