முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதால், சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். இதையேற்ற தமிழக அரசு, ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதையடுத்து, மே 28 ஆம் திகதி பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். அங்கிருந்து, சிறுநீரக தொற்று உட்பட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அதன்பின், பேரறிவாளனுக்கு இருமுறை தலா 1 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன் (ஆக. 27) முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு மூன்றாவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது.