ஈழத் தமிழர்களிற்காக தமிழகமுதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
நீண்டகாலமாக தமிழ்நாட்டிலே அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளையும், அவர்களுடைய எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்துள்ளீர்கள். அத்துடன் நம்முடைய சந்ததிகளின் உயர்கல்விக்கான உதவித் திட்டத்தையும் மற்றும் இலங்கையில் மீள குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவினையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்ததோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி ஆக்கபூர்வமான செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு தங்களுக்கு எமது மக்கள் சார்பாக உளம் கனிந்த நன்றியையும் தங்களது நல்லாட்சி தொடர்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். என்றுள்ளது.