26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
குற்றம் முக்கியச் செய்திகள்

2 வருட பழிக்குப்பழி மோதல் இரத்த சரித்திரம்: ஏமாற்றி அழைத்து வெட்டிக்கொலை; குருநகர் இளைஞன் கொலையின் பின்னணி!

யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞனை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி, கொலை செய்த கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த கும்பலின் உறுப்பினர்கள் குடும்பங்களுடன் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை சுகவாழ்வு சிகிச்சை நிலையத்திற்கு அண்மையாக கடந்த 22ஆம் திகதி மாலை 4 மணியளவில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23ஆம் திகதி இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

குருநகரை சேர்ந்த எட்மன்ட் ஜெரன்ஸ் (24) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

கெமி ரௌடிக்குழுவின் கொடூரம்

இந்த வாள்வெட்டு தாக்குதல், உயிரிழந்த ஜெரன்ஸை குறிவைத்தே நடத்தப்பட்ட, திட்டமிட்ட தாக்குதல். அவர் ஏமாற்றி அழைக்கப்பட்டு, அங்கு தாக்கப்பட்டுள்ளார். அங்கு தாக்குதல் நடத்த வந்த கும்பலை சேர்ந்த அத்தனை ரௌடிகளும் அவரை வாளால் வெட்டியதாக தெரிய வருகிறது.

வெட்டுக்காயத்துடன் வீழ்ந்த அவரின், தலை முதல் பாதம் வரை வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.

பாசையூரை சேர்ந்த கெமி என்ற ரௌடிக்குழுவே இந்த குற்றச்செயலில் தொடர்புபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பொலிசாரிற்கு கிடைத்த தகவல், சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக கெமி குழுவினர் தலைமறைவாகி விட்டனர்.

வாள்வெட்டுக் குழுக்களால் ஒரு மனிதக்கொலை… அதுவும் ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்டது, பொலிசாரையும், நாட்டின் சட்ட அமைப்பையும் சவால் செய்யும் நடவடிக்கையாகும். இதனால், பொலிசாருக்கும் இந்த சம்பவம் சவாலாக அமைந்துள்ளது. ரௌடிக்குழுவை தேடி பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த எட்மண்ட் ஜெரன்ஸ்

நடந்தது என்ன?

குருநகர்- பாசையூரை சேர்ந்த சில இளைஞர்கள், மனநலம் பிறழ்ந்தவர்களை போல கடந்த சில வருடங்களாகவே செயற்பட்டு மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என செயற்பட்டு, சமூக விரோத குழு கலாச்சாரத்திற்கு அங்கு தொடர்ந்து நீரூற்றப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சிதான் இந்த சம்பவமும்.

22ஆம் திகதி நாடு முழுவதும் முடங்கியிருக்க கெமி ரௌடிக்குழு மட்டும் அன்று காலையிலிருந்து, தாக்குதல் நடந்த பகுதிகளையண்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அன்று மாலை, குருநகரிலிருந்த இளைஞன் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், உயிரிழந்த ஜெரன்ஸின் நெருங்கிய நண்பர். இருவரின் நட்பும், கெமி ரௌடிகளிற்கும் தெரியும்.

அந்த இளைஞனை பிடித்து தாக்கி, அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து ஜெரன்ஸிற்கு தகவல் வழங்கியுள்ளனர். தன்னை தாக்கிவிட்டு குழுவொன்று சென்றுள்ளதாகவும், தன்னை வந்து மீட்டு செல்லுமாறும் ஜெரன்ஸிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தனது நண்பர் தாக்கப்பட்டு, வீதியில் இருப்பதாக தகவல் கிடைத்தபோது, இரண்டு நண்பர்களுடன் இருந்த ஜெரன்ஸ், உடனே புறப்பட்டுள்ளார். தனது நண்பர் வீதியோரம் இருப்பதாக நினைத்து, ஜெரன்ஸூம் நண்பர்களும் சென்றனர். மோதல் ஒன்று நடக்குமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்கு தயாராகவும் செல்லவில்லை.

நண்பர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு சிறிது தூரம் முன்னதாகவே- குருநகர் திருச்சிலுவை சுகநக நிலையத்தின் அருகில்- ஜெரன்ஸ் மற்றும் நண்பர்கள் மீது கெமி குழு ரௌடிகள் எதிர்பாராத விதமாக வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.

இந்த குற்றச்செயலிற்காக சுமார் 20 பேர் வரையான கெமி குழு ரௌடிகள் வந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் பலர் ஜெரன்ஸை வெட்டினர். குறிப்பாக அவரது கால்களில் வெட்டு விழுந்தது.

ஏன் ஜெரன்ஸ் குறி வைக்கப்பட்டார்?

இதற்கு 2,3 வருடங்கள் முற்பட்ட பிளாஷ்பேக் கதையொன்றுள்ளது.

2 அல்லது 3 வருடங்களின் முன் நத்தார் பண்டிகை சமயத்தில் யாழ்  மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக இரண்டு தரப்பிற்கிடையில் அடிதடி மோதல் நடந்தது.

கெமி குழுவினர் அட்டகாசம் செய்தபோது, ஜெரன்ஸனும் சிலரம் அவர்களை தாக்கியுள்ளனர். முக்கியமாக அந்த குழுவின் தலைவனான கெமியை, ஜெரன்ஸ் தாக்கியுள்ளார். இதுதான், இந்த கொலைச்சம்வத்தின் மூலக்கதை.

அன்று தொடக்கம் ஜெரன்ஸை பழிவாங்கும் இரத்த வெறி. கெமி குழுவிடம் இருந்துள்ளது. ஆனால், அதை சாதாரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் ஜெரன்ஸின் எச்சரிக்கை. பேருந்து நிலைய சம்பவத்தின் பின், ஜெரன்ஸ் மீது வாள்வெட்டு தாக்குதலை- சுமார் 4 தடவைகள் வரை- கெமி குழு மேற்கொண்டுள்ளது. ஆனால் ஜெரன்ஸ் வில்லங்கமாக சிக்கவில்லை. அவர் வேகமாக தப்பிச் செல்லக்ககூடியவர்

ஜெரன்ஸிற்கு, கெமி குழு பல பொறிகளை வைத்தது. எனினும் ஜெரன்ஸ் சிக்கவில்லை. இரண்டு, மூன்று வருட  வன்மம் கெமி குழுவின் மனதில் இருந்துள்ளது.

இதனால்தான், 22ஆம் திகதி பொறி வைத்து ஜெரன்ஸை பிடித்தபோது, அவரது கால்களை குறிவைத்து வெட்டி வீழ்த்திள்ளனர்.

உயிரிழந்த எட்மண்ட் ஜெரன்ஸ்

ஜெரன்ஸ் மீது ஏராளமானவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்று வாள்வெட்டுக்கு சென்றவர்கள் அனைவரும் ஜெரன்ஸை வெட்டியுள்ளனர்.

தலைமறைவு

அன்றைய குற்றச்சம்பவத்தை கெமி குழுவே நடத்தியதாக நம்பப்படுகிறது.

தற்போது கெமி குழு தலைமறைவாகி விட்டது. சம்பவத்தை தொடர்ந்து ரௌடிகளின் வீடுகளிற்கு பொலிசார் சென்றபோது, ஈ காக்காய் கூட வீட்டிலிருக்கவில்லை. அனைவரும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். சிலரது வயோதிப பெற்றோர் மாத்திரம் வீடுகளில் உள்ளனர்.

இது மிகப்பாரதூரமான குற்றச்சம்பவம். பொலிசார் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் மனைவிமார் தங்கியிருந்தால், அவர்களை பொலிசார் கடுமையாக விசாரணைக்குட்படுத்துவார்கள், சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதற்காகவே மனைவி, பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரௌடிகள் தலைமறைவாகிள்ளனர் என விசாரணையுடன் தொடர்புடைய ஒரு பொலிஸ் அதிகாரி தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த போது நாடு முழுவதும் முடக்கத்தில் இருந்தது. அதற்குள் வாள்வெட்டு குற்றச்செயலில் ஈடுபட்டு, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ரௌடிகள் எங்கே தப்பிச்சென்றிருக்க முடியும் என்ற கேள்வி உங்களிற்கு எழலாம்.

தொடர்ந்த இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் கடல்வழியாகவே தப்பிச் சென்று வருகிறார்கள். குருநகரிற்கும், பூநகரிக்கும் இடையிலான குறுகிய குடாக்கடலை படகில் கடந்து, பரந்த வன்னிப் பகுதிக்குள் ரௌடிகள் குடும்பங்களுடன் தலைமறைவாகி விட்டனர் என கருதப்படுகிறது.

தேடப்படும் ரௌடிகளில் பலர் சட்டவிரோதமான பணமீட்டும் வர்த்தக நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பாதுகாப்பான பின்தளமாக வன்னிப்பகுதியில் மறைவிடங்களை ஏற்படுத்தி வைத்திருக்கலாம் என்றும், அந்த இடங்களிலேயே தற்போது குடும்பங்களுடன் பதுங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

பொலிசாருக்கு மேலதிகமாக புலனாய்வு அமைப்புக்களும் களமிறக்கப்பட்டுள்ளதால் ரௌடிகள் விரைவில் சிக்குவார்கள் என்பது நிச்சயம். அவர்கள் சிக்கும் பட்சத்தில், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு பின்தளமாக இருந்த இடங்களும் அம்பலமாகும்.

குருநகரிற்கும் பூநகரிக்கும் இடைப்பட்ட சிறிய நிலப்பகுதியான மண்ணித்தலை பகுதியை, யாழில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக இருக்க பயன்படுத்துவதாக தகவலுண்டு. கெமி குழுவினரும் அங்கு தலைமறைவானார்களா என பொலிசார் ஆய்வு செய்தனர். எனினும், யாரும் சிக்கவில்லை. பொலிசார் வருவதை அறிந்து முன்னரே தப்பிச் சென்றனரா என்பது இதுவரை தெரியவரவில்லை.

தேடப்படும் கெமி குழுவினர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கோப்பு படம்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட யாரும் நீண்டகாலமாக தப்பி வாழ முடியாது என்பது, குற்றவியல் வழக்கு வரலாறு. நவீன தொழில்நுட்பங்கள், தலைமறைவாக செல்லும் ஒவ்வொருவரின் காலடித் தடங்களையும் அறிந்தே வைத்திருக்கும். இந்த யதார்த்தத்தன்அடிப்படையிலும், பொலிஸ் குழுக்கள் பல களமிறக்கப்பட்டுள்ளமையின் அடிப்படையிலும், குற்றவாளிகள் சில நாட்களில் சிக்குவார்கள் என நம்பலாம்.

இந்த வன்முறை, வாள்வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மக்களின் அமைதியான அன்றாட வாழ்விற்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளனர். இந்த குழுக்களே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. எனினும், இந்த குழுக்கள் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை. தீவிரவாதம், மத தீவிரவாதம் தொடர்பான புதிய ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் இணைக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடையவர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படுவதை போல, இந்த குழுக்களும் முழுமையாக கைது செய்யப்பட்டு, புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டு, அவர்களையும் நல்வழிப்படுத்தி, சமூகத்தின் அமைதியான வாழ்விற்கும் பொறுப்பான தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

What’s your Reaction?
+1
2
+1
2
+1
2
+1
5
+1
8
+1
4
+1
11

இதையும் படியுங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment