தங்களுக்கு சவாலாக திகழும் அகமது ஷா மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சாலே ஆகியோரை தலைவணங்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தலிபான்கள்.
இதற்காக இஸ்லாமிக் எமிரேட்டின் முஜாகிதீன் படையினர் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினாலும், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டும் அவர்களிடம் வீழ்ச்சியடையவில்லை. தலிபான் எதிர்பு அணியினரின் கோட்டையான அது உள்ளது.
காபூலின் வடமேற்கில் அமைந்துள்ள பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு சிங்கங்களின் பூமி என்று அழைக்கப்படும் ஒரு மலைப்பாங்கான பள்ளத்தாக்கு ஆகும். அங்கு இப்போது ஆப்கான் தேசிய பாதுகாப்பு படையிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் அஹமது ஷா மசூத் தலைமையிலான போராளிகள் அங்கு நிலை கொண்டுள்ளனர்.
1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதும்கூட பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். அம்ருல்லா சாலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990 களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். 1996இல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால், தலிபான்கள் சாலேவின் சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். 1996 சம்பவம் தலிபான் மீதான தனது பார்வையை மாற்றியமைத்ததாக அவர் ஒரு முறை கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அம்ருல்லா சாலே தலிபான்களுக்கு விடுத்த செய்தியில், ”நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கு எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன். என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
அமருல்லாவும், அகமது மசூதும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. இருவரும் கைகோர்த்து தலிபான் எதிர்ப்புப் படைக்கு தலைமை தாங்குவதும் உறுதியானது. இந்நிலையில் தான், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை எங்களிடம் அமைதியாக ஒப்படைக்க அங்குள்ள உள்ளூர் தலைவர்கள் மறுப்பதால் இஸ்லாமிக் எமிரேட்டின் நூற்றுக்கணக்கான முஜாகிதீன்கள் அங்கு படையெடுத்துச் செல்கின்றனர் என தலிபான்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை நெருங்கும் தமக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லையென்றும், அந்த பகுதியின் எல்லையை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அகமது மசூத் நேற்று ரொய்ட்டர்ஸிற்கு அளித்த பேட்டியில், தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். எங்களுக்கு போர் நடத்த விருப்பமில்லை. ஆனால், அவர்கள் சண்டை தான் தீர்வு என்று நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம். எந்த ஒரு அடக்குமுறை ஆட்சியையும் நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைய வேண்டும். அதில் உள்நாட்டின் சிறுசிறு மொழிவாரியான குழுக்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சர்வதேச சமூகம் தலிபான்களை சர்வாதிகாரிகள் என்று அழைக்காத வண்ணம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலிபானின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளர் நயீம் வர்தக் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கையில், தமது கொள்கை பேச்சுவார்த்தைதான். பேச்சுவார்த்தை மூலம் அனைத்தையும் தீர்த்து வைக்க விரும்புவதாக கூறினார். பாஞ்ஷிர் மாகாணத்தின் மக்கள் மற்றும் பழங்குடித் தலைவர்கள் அவர்களுடன் சேர்ந்து வன்முறையைத் தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.