இரவில் ஒன்றே ஒன்று- ‘மெனிகே மஹே ஹிதே’ (Manike Mage Hithe) என்ற பாடலின் மூலம் இணையத்தில் பிரபலமாகியுள்ளார் சிங்கள பாடகி யொகானி.
இந்த பாடலை இதுவரை 51,827,625 பேர் இணையத்தளத்தில் பார்த்துள்ளனர். சிங்கள மொழி பாடலொன்று யூடியூப் தளத்தில் அதிமாக பார்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
‘இரவில் ஒன்றே ஒன்று’ இந்த பாடல் இப்போது நாடு, மொழி கடந்து பரவலாக வரவேற்ப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை துலஞ்சா அல்விஸ் எழுதியுள்ளதோடு, சாமத் சங்கீத் இசை அமைத்துள்ளார். இந்த பாடலை யொஹானியுடன் சதீஸ்சான் பாடியுள்ளார்.
இந்த பாடல் வெளியாகி பின்னர் அவருடைய யூடியூப் சேனலை 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள்.
இந்த பாடலை பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் பாராட்டியுள்ளார். அந்தப்பாடலுடன்,அமிதாப்பச்சனின் பழைய பாடல் காட்சியொன்றை இணைத்து ஒருவர் வெளியிட, அமிதாப்பச்சன் அதனை ருவிற்றரில் பகிர்ந்திருந்தார்.
இந்திய ரசிகர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பாடல் தமிழிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலை தமிழில் யொஹானி மற்றும் அனஸ் ஷாஜஹான் பாடியுள்ளார்கள். சாமத் சங்கீத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள பாடல் வரிகள் அனாஸ் ஷாஜஹான் மற்றும் என்எஸ்டி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.
யொஹானி 1993 ஜூலை 30 கொழும்பில் பிறந்தவர். இவர் பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், இசையமைப்பாளர். யூடியூபராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
யுத்தத்தின் இறுதியில் 55வது படையணிக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார். இங்கிலாந்தில் படித்து கணக்கியலில் பட்டம் பெற்றுள்ளார்.