அவுஸ்திரேலியா தனது மக்கள்தொகையில் குறைந்தது 70வீதமானவர்களிற்கு தடுப்பூசி போடும் வரை கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்கத்தை கடைபிடிக்கும், ஆனால் அதன் பிறகு அது வைரஸுடன் வாழத் தொடங்கும் என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நேற்று 914 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நியூ சவுத் வேல்ஸின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள், விக்டோரியா மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் கடுமையான முடக்கத்தின் கீழ் உள்ளது.
“நீங்கள் எப்போதும் பூட்டுதல்களுடன் வாழ முடியாது, ஒரு கட்டத்தில், நீங்கள் அந்த கியர் மாற்றத்தை செய்ய வேண்டும், அது 70% மக்கள் தடுப்பூசி செலுத்தும் போது செய்யப்படும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மொரிசன் தெரிவித்தார்.
முடக்கம் என்பது மத்திய அரசின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இது 70% சதவிகித நிலையை அடையும் வரை தொற்று பரவலைக் கட்டுப்படுத்துகிறது. எண்ணிக்கை 80%ஆக உயரும் போது எல்லைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்றார்.
“முடக்கல் வைரஸை சமாளிக்க ஒரு நிலையான வழி அல்ல, அதனால்தான் நாங்கள் 70% மற்றும் 80% அளவை பெற வேண்டும், அதன்பின் நாம் வைரஸுடன் வாழத் தொடங்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 60% மக்கள் இப்போது முடக்கப்பட்ட பகுதியில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.