எரிபொருள் பற்றாக்குறை தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட தேசிய ஊழியர் சங்கத்தின், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளை ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 19 ஆம் திகதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், எரிபொருள் நெருக்கடி ஏற்படவுள்ளதாக அவர் கூறியிருந்தார். எரிபொருள் இருப்பு 11 நாட்கள் மட்டுமே போதுமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது தகவலில் உண்மையில்லை, அந்த அறிக்கையில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதால் அவர் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிஐடியிடம் புகார் அளித்தது.
இதை தொடர்ந்து, வத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.
சிஐடி விசாரணைகளைத் தொடர்ந்து ஆனந்த பாலிதவின் கூற்றுகளில் உண்மை இல்லை என்று தெரியவந்தது.