புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்க கூடிய விரைவில் திகதியை நிரணயிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கனவே ஜூன் 16 அன்று திட்டமிடப்பட்ட கூட்டம் ஜனாதிபதியால் பதினொரு மணித்தியாலங்களின் முன்னர் இரத்து செய்யப்பட்டதாகவும், கூட்டத்திற்கான புதிய திகதிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் காத்திருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அரசியலமைப்பு உருவாக்கும் செயல்முறையை இனியும் தாமதிக்க வேண்டாம் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
“1972 மற்றும் 1978 அரசியலமைப்பு உருவாக்கம் முறையே இரண்டு வருடங்கள் மற்றும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டது. தற்போதைய செயல்முறை கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, ”என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.
“1978 முதல் நாங்கள் 1978 2 வது குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆளப்படுகிறோம், இருப்பினும் இந்த அரசியலமைப்பு 1994 முதல் ஒவ்வொரு தேசிய தேர்தலிலும் இறையாண்மை கொண்ட மக்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு எமது சம்மதமின்றி தயாரிக்கப்பட்ட, எமது விருப்பத்தை ஏற்காத ஒரு அரசியலமைப்பின் கீழ் ஆட்சி செய்யப்பட்டுள்ளோம்“ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1988 இல் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 13 வது திருத்தம் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது மற்றும் 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அடுத்தடுத்த அரசாங்கமும் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலை ஏற்படுத்த 13 வது திருத்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டது. இந்த செயல்முறைகளில் இருந்து கணிசமான ஒருமித்த கருத்து பெறப்பட்டுள்ளது, ”என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.