தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.
இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ள நடிகர் சௌந்தரராஜா, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். தனது பிறந்த நாளை கொண்டாடும் சௌந்தரராஜா, தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 5வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.
தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். மேலும், அங்கு உள்ள தோட்டக்கார அண்ணனிடம் அதை பாதுகாத்து வளர்க்க கேட்டுக்கொண்டதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.