பிரீமியம் ஸ்டோரி ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்த்திருந்த போது, புதிய டைட்டிலுடன் சிம்புவின் 47-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ‘வெந்து தணிந்தது காடு’ என்ற டைட்டிலுடன் வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் புகைப்படமும் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என மாற காரணம் என்ன என விசாரித்தோம்.
இயக்குநர் கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா – 2’ படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பதாகவும் அதற்காக கெளதம் மேனன் – சிம்புவுக்கு அட்வான்ஸ் தரப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. அது கெளதம் மேனன் கடன் பிரச்னையால் சிக்கலில் இருந்த சமயம். அப்போதுதான், ஐசரி கணேஷ் மூலம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியானது. ‘ஜோஷுவா இமை போல் காக்க’ ஆரம்பமானது.
‘வெந்து தணிந்தது காடு’
கெளதம் மேனன் ஒரு பக்கம் பிஸியாக இருக்க, சிம்பு ஒரு பக்கம் பிஸியாக இருக்க, ‘விண்ணைத்தாண்டி வருவாயா – 2’ நடக்கவில்லை. பின், ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ அறிவிப்பு வெளியான சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை வந்து சினிமாத்துறையை ஸ்தம்பிக்க செய்தது. இந்த இடைவெளியில் சிம்பு, கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஏற்கெனவே வைத்திருந்த கதைக்கு பதிலாக எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அதுதான் ‘வெந்து தணிந்தது காடு’.
விரைவில் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிபெறவேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் ஆசை!