நம் கடந்த காலத்தை நோக்கினால் பலருக்கு வருத்தம், கோபம், இயலாமை, குற்ற உணர்வு என பல விஷயங்கள் இருக்கலாம். எல்லாம் நம் மனதின் கடந்தகால செயல்பாடுகள் என்று புரிந்துகொண்டால், அதை மாற்றி அமைக்க முடியும்.
செக்கு மாடுபோல் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யும் குணம் கொண்டது மனது. அதனால்தான் தவறுகளில்கூட பழையவற்றையே செய்யும். மனத்தின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளுதல் மிக எளிது. இதனால்தான் முதுமை அடைந்தாலும் பலர், ஒரே வகை தவறுகளை திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.
20 வயதில் கடன் தொல்லைகளால் அலைக்கழிக்கப்பட்டவர் ,, 50 வயதிலும் வேறு கடன் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதை பார்க்க முடிகிறது. அம்மாவிடம் கோபித்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருந்த இளைஞன், முதுமையில் மகனிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பான். எப்படி ஒரு திரைப்படம் ஒரு வகை ஊகிப்புத் தன்மையுடன் செயல்படுகிறதோ, அப்படித்தான் நம் வாழ்க்கையும்.
திரைப்படங்களில் காமெடி, சண்டை, காதல் என்று காட்சிகள் உண்டு. அந்த வரையறைக்குள், அதற்கேற்பத்தான் கதை செல்லும். இதுபோல் நம் வாழ்க்கையும்கூட ஊகிக்கக்கூடிய ஒரு ஸ்கிரிப்ட்தான். அதன் பொது அம்சம் பிடிபட வேண்டும். குடும்பத்துக்கு தன் முழு வாழ்க்கையையும் மிச்சம் வைக்காமல் தியாகம் செய்தல் ஒரு ஸ்கிரிப்ட். ஒவ்வொரு காதாக கலந்து, உடைந்து, மீண்டு பிறகு அடுத்த காதல் எனச் செல்லும் வாழ்க்கை மற்றொரு ஸ்கிரிப்ட்.
மனம் தன் நாடகத் தன்மையை கண்டுகொள்ளும். அடுத்த முறை அதே நேரத்தில் பழைய பாணியில் இல்லாமல் புதிதாகச் செய்வது குறித்து யோசிக்க முயல வேண்டும். நம் முந்தைய வினைகளை களைவது என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் வேலை அல்ல. அது நம் முயற்சிகளில் உள்ளது. மனதை மாற்ற மனதை கவனியுங்கள். மனம் மாறும். வாழ்க்கையும் புதிய கோணத்தில் மாறும், என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.