காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இஸ்லாம் மதத்தை புண்படுத்தும் விதமாகவோ, இஸ்லாமிய மக்களை புண்படுத்தும் விதமாக எந்த கருத்தையும் தாம் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கவில்லை எனவும் தாம் எப்போதும் முஸ்லிம் மக்களை புறம் தள்ளி தமது பிரதேச சபை இபிவிருத்திகளை மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்தார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், இஸ்லாமிய மதம் தொடர்பான அவதூறான கருத்தை வெளியிட்டதாக அந்த பிரதேச சபையின் முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது அவர் மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பாக கடந்த சிலதினங்களாக ஊடகங்களில் ஏட்டிக்கு போட்டியான கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்காக சம்பந்தப்பட்ட எமது கட்சியை சேர்ந்த தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். அவர் தாம் அப்படி முஸ்லிம் மதத்தையோ அந்த கடவுளையோ அல்லது முஸ்லிம் மக்களையோ அவமானப்படுத்தும் விதமாக தாம் எந்தக்கருத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவிவும் இல்லை. எந்த இடத்திலும் பேசவும் இல்லை. வேறு யாரோ இட்ட பதிவுகளை வைத்துக்கொண்டு தம்மீது சில முஸ்லிம் சகோதரர்கள் தமது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத சிலர் தம்மீது சேறு பூசுகிறார்கள் என்பதை என்னிடம் தெரிவித்தார்.
பொறுப்பு வாய்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநி ஒருவர் ஏனைய மதங்களை அவதூறாக பேசி இருந்தால் அது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த விடம் தற்போது பொலிசாரிடமும் பல முஷ்லிம் பிரதிநிதிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
காரைதீவு பிரதேசபை என்பது தமிழ் முஷ்லிம் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு இயங்கும் ஒரு ஒற்றுமையான பிரதேச சபையாகும் அங்கு இடம்பெறும் அபிவிருத்தி வேலைகள் சிரமதானப்பணிகள் வீதி துப்பரவுப்பணிகள் மின்குமிழ் பொருத்தும் பணிகள் எல்லாமே இனப்பாகுபாடுகள் இன்றி எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் தவிசாளர் ஜெயசிறில் மிகவும் நேர்மையாகவும் பாரபட்சம் இன்றியும் ஒற்றுமையாகவும் கடந்த பல வருடங்களாக செய்து வருவதையும் துணிச்சலாக பல அபிவிருத்திகளை முன்எடுப்பதையும் நாம் அறிவோம்.
இவ்வாறான நிலையில் திடீரென அவர் மீது சேறு பூசும் நோக்கில் யாரோ சிலர் திட்டமிட்டு இவருக்கு எதிராக இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து வருவது நல்லதல்ல.
ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் ஒரு மதத்தை அவமானப்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவுத்திருப்பின் அது தவறு என்பது எமது கட்சி தலைமைக்கு நன்கு விளங்கும். அதற்காகவே சம்மந்தப்பட்ட தவிசாளருடன் நான் தொடர்பு கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறியுள்ளீர்களா என்பதை கேட்டேன். அவர் அதை முற்று முழுதாக மறுத்தார். தாம் அப்படி மதம் சார்ந்த அவதூறான கருத்துகள் எதையும் எந்த சந்தர்பத்திலும் தாம் தெரிவிக்கவில்லை என்பதை ஆணித்தரமாக என்னிடம் வலியுறுத்தினார்.
தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்று விக்கும் முயற்சியில் இரு இனங்களை சேர்ந்தவர்களும் முற்படுவது இன்றைய நிலையில் நல்லதல்ல. ஒருவர் தவறான கருத்தை தெரிவித்ததாக சந்தேகம் ஏற்படின் சம்மந்தப்பட்டவருடன் நேரடியாக தொடர்பு கொண்டு அதனை பேசித்தீர்பதே சிறந்த அணுகுமுறையாகும்.
ஏட்டிக்குப்போட்டியாக ஊடகங்களில் அல்லது சமூகவலைத்தளங்களில் அவதூறாக ஒருவர் மற்றவரை பற்றி கருத்துக்களை தெரிவிப்பது சமூக ஒற்றுமையை பாதிக்கும். இதேவேளை பொலிசாரிடம் முறையிடுவதன் மூலம் கருத்து முரண்பாடுகள் விரிவடையவும் வாய்புகள் உள்ளது.
எம்மை பொறுத்தவரை தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செயல்படும் காரைதீவு பிரதேசபை தொடர்ந்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எமது தமிழதேசிய கூட்டமைப்பினதும், இலங்கை தமிழரசு கட்சியினதும் எதிர்பார்ப்பு.
ஏதும் மனக்கசப்புகள் ஏற்படின் நேராக பேசி பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்த்து தொடர்ந்தும் காரைதீவு பிரதேச சபை ஒற்றுமையாக செயல்பட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் மனக்கசப்புகளை மறந்து புரிந்துணர்வுடன் தொடர்ந்தும் செயலாற்றுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறேன்.
ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அந்த குடும்பத்தில் உள்ளவர்களால் தீர்ப்பதைப்போன்றே ஒரு பிரதேச்சபையும் ஒரு குடும்பம் போன்றே செயல்படவேண்டும் பிரச்சனைகள் வரும்போது அதை பேசி தீர்பதே நல்லது. ஏட்டிக்குப்போட்டியான அறிக்கைகளாலும் சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகளாலும் இனமுரண்பாடே வளர்ச்சிபெறும். சட்ட நடவடிக்கைகளும் பொலிஸ் விசாரணைகளும் நீண்ட முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் எனவும் மேலும் கூறினார்.