கத்திமுனையில் மிரட்டி 30 வயது இளைஞரை திருமணம் செய்தததாக 50 வயது பெண் மீது அரசு ஊழியர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநில வேளாண் துறையில் பணிபுரிந்து வருபவர், ரின்கேஷ் கேஷர்வானி. 30 வயதான இவர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜபல்பூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். அங்கு, 50 பெண், ஒப்பந்த ஊழியாகப் பணியாற்றி வருகிறார். அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சில வருடமாக என்னை வற்புறுத்தி வந்தார். கடந்த 15 ஆம் தேதி, அவர் நண்பர்களுடன் சேர்ந்து என்னை தாக்கினார். இதுபற்றி அன்றே ஜபல்பூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தேன்.
பிறகு 16 ஆம் தேதி, கோலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்து தனது நண்பர்க ளுடன் என்னை கத்திமுனையில் கடத்தி, அவருடைய உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார். மறுநாள் மயக்க மருந்து கொடுத்து, கோயிலுக்கு கடத்தி சென்றனர். அவர் என்னை கத்தியை காட்டி மிரட்டினார். தாலி கட்டாவிட்டால் கொன்றுவிடுவதாகச் சொன்னார். நான் பயந்து தாலிகட்டினேன்.
ஜூன் 17 ஆம் தேதி அந்தப் பெண் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்துவிட்டேன். ஜபல்பூர் மாவட்ட எஸ்.பியிடம் இதுகுறித்து புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜபல்பூர் போலீஸ் நிலையம் முன்பு நான் கடத்தப்பட்டதால், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யவும் சொன்னேன். போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜபல்பூர் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.