சர்ச்சையில் சிக்கிள்ள கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு எதிராக நாளை 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய விடயம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படும்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவன வளாகத்தில் விசாரணையை நடத்தும்.
இதேவேளை, இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரி விசாரணைக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவ் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து தொடரில் இணைக்கப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஜூன் 27 ஆம் திகதி டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற வீரர்கள் உயிர் குமிழி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதை உடைத்துக் கொண்டு மூவரும் இரகசியமாக வெளியேறிய விடயம் அம்பலமானதையடுத்து, அவர்கள் உடனடியாக நாட்டுக்கு அழைக்கப்பட்டனர்.
ஆட்டத்திறனில்லாத இலங்கை அணியின் வீரர்களின் நடத்தை ரசிகர்களை மேலும் கொதிப்படைய வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையை தொடர்ந்து வீரர்களிற்கான தண்டனை விபரம் வெளியாகும்.