29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் காலத்து செப்புப்பட்டயம் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்து ‘செப்புப்பட்டயம்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் பேராசிரியர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் அடுத்த அகரம் என்ற கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது அங்கு 600 ஆண்டுகள் பழமையான வரலாற்று தகவல்கள் உள்ளடக்கிய செப்புப்பட்டயம் கண்டெடுத்தனர்.

இது குறித்து, பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது,‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவணப்படுத்தப்படாத ஏராளமான வரலாற்று தடயங்களை எங்கள் ஆய்வுக்குழுவினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நண்பர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் அடுத்த அகரம் என்ற கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி கோயில் தர்மகர்த்தா பலராமன் என்பவரிடம் செப்புப்பட்டயம் ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து, அங்கு சென்று அந்த செப்புப்பட்டயத்தை பெற்று அதனை சுத்தம் செய்து அதில் உள்ளவைகளை படித்தப்போது, அப்பட்டயம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.

இப்பட்டயத்தில் கிருஷ்ணதேவராயரின் மெய்கீர்த்தி சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த செப்புப்பட்டயமானது, 615 கிராம் எடையும், 36 செ.மீ., நீளமும், 23.5 செ.மீ., அகலம் கொண்டதாக உள்ளது. 2 பகுதிகளாக உள்ள இதனை துளையிட்டு வளையங்களால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு, சூரியன், பிறைச்சந்திரன் சாட்சியங்களாகவும், அதன் கீழே வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் காளை உருவமும் நடுவே சிவலிங்கமும் வரையப்பட்டுள்ளன. இதன் கீழே ‘சிவன் துணை ஸ்ரீ அருணாத்திரியீஸ்வரர் சாதனப்பட்டயம்’ என தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

கி.பி.1515-ம் ஆண்டு எழுதப்பட்ட இப்பட்டயம் திருவண்ணாமலை ‘தனியூர்’ தகுதி பெற்றிருந்ததை விளக்குகிறது.

தொண்டை மண்டலத்தில் உள்ள 24 கோட்டங்கள் 79 வளநாடுகளில் வாழும் பெரியநாட்டவர்கள் எனப்படும் சைவ வேளாளர்கள் இணைந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கல்யாணத்துக்கு அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நந்தன வனப் பராமரிப்புக்கு நன்கொடை வழங்கியதை அறிவிக்கிறது.

இதை பாதுகாப்பவருக்கு வாக்கு சகாயம், சரீர சகாயம், அறந்த சகாயம் கிடைப்பதோடு கோதானம், பூதானம், கன்னிகாதானம், அன்னதானம், சொர்னதானம், வலைத்திரதானம் பெறக்கடவது என அதில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு தீங்கு விளைவிப்போர் பசுவைக்கொன்ற, சிசுவைக்கொன்ற கோஷத்தையும் பிரம்மஹத்தி கோஷத்தையும் பெறுவார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது.

தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியது என விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது. அவை புழல் கோட்டம், புலியனூர் கோட்டம், மடியகாட்டுக்கோட்டம், மண்ணூர் கோட்டம், செங்காடுக்கோட்டம், பயனூர் கோட்டம், எயில்கோட்டம், தாமல்கோட்டம், ஊத்துக்கோட்டம், களத்தூர் கோட்டம், செம்மூர் கோட்டம், இத்தூர்கோட்டம், ஆழூர்கோட்டம், வெங்குணக்கோட்டம், பல் குணக்கோட்டம், இளங்காட்டுக்கோட்டம், காளியூர் கோட்டம், சிறுகனூர்கோட்டம், படூர்கோட்டம், கடிகைக்கோட்டம், செந்தீரக்கோட்டம், குணபத்திரக்கோட்டம், வேங்கிடக்கோட்டம், வேலூர் கோட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிய வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய இந்த செப்புப்பட்டயம் தொண்டை மண்டல வரலாற்றின் மிக சிறப்புக்குரியதாகவும். இது தொடர்பான மேலாய்வுப்பணிகளில் எங்கள் ஆய்வுக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்’’.இவ்வாறு அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment