இலங்கை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஜனநாயகப்படுத்த 3 பரிந்துரைகள்!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஜனநாயக மயப்படுத்த மூன்று பரிந்துரைகளை ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக ஜனாதபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல் –
என்பவற்றுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை, நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தது.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக – ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகள் மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸை தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்ப்பாண முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா -ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, மேற்படி சட்டம் திருத்தப்பட வேண்டும் என இந்த இடைக்கால அறிக்கையின் ஊடாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் அமுல்படுத்துவது தொடர்பான – மூன்று முன்மொழிவுகளை இந்த இடைக்கால அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளது.

இச்சட்டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாகத் தடுத்து வைத்தல் நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் போது – குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து வழக்குகளை விசாரணை செய்து முடிப்பது குறித்தும்; இச்சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்குப் பதிலாக –
விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைப்பதற்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.

13ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒர் ஆலோசனைக் சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்மொழிந்துள்ளது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் வகையில்,
பொறுப்புக்கூறல் மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக,
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர் நிறுவனங்களோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை ஜனநாயக மற்றும் சட்ட செயன்முறைக்குள் தீர்ப்பதற்கும்அதேவையான நிறுவனச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் – அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கும்,
முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மேற்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, மேலதிகச் செயலாளர் டி. டி. உப்புல்மலி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் ஜனாதிபதி சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

உயர் மட்ட தீர்மானத்தை நானாட்டான் பிரதேச செயலாளர் மீறுவதாக குற்றச்சாட்டு

Pagetamil

சுமந்திரன் இறுதி யுத்தத்தில் ஒருமுறை முள்ளிவாய்க்காலை கடந்திருந்தால் சாட்சியம் போதாதென கூறியிருக்க மாட்டார்!

Pagetamil

மன்னாரில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!