27.5 C
Jaffna
August 7, 2022
இலங்கை

யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பெண்: நீதிமன்றத்தில் வெளியான தகவல்!

ரியூப் தமிழ் எனும் யூரியூப் குழுவின் பணிப்பாளர் டிவினியா நிலுசினி கைது செய்யப்ப்ட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் கடந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவரை தடுத்து வைத்திருப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் சி.ரி.ஐ.டி.க்கு நேற்றுவரை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை என நீதிமன்றில் வெளிப்பட்டது.

சட்டத்தரணிகளான ஆர்னோல்ட் பிரியந்தன். செல்வி தர்மஜா தர்மராஜா, பிரிந்தா சந்திரகேஸ் ஆகியோருடன் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது சேவை பெறுநரான ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா நிலுசினியை தடுத்து வைப்பதற்கான ஆவணம் தொடர்பில் எழுப்பிய கேள்வியை அடுத்து இந்த விடயம் வெளிப்பட்டது.

டிவினியா நிலுசினி கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் 26 ஆம் திகதியுடன் 3 மாதங்கள் நிறைவடைவதாகவும், அதற்கு மேலும் அவரை தடுத்து வைக்க தடுப்புக் காவல் உத்தரவு புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, அவரை தடுத்து வைப்பதர்கான எந்த சட்ட ரீதியிலான ஆவணமும் இதுவரை மன்றின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே, மன்றில் ஆஜராகியிருந்த பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொறுப்பதிகாரி கபில ஹேவமான்ன, குறித்த நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க கடந்த முதலாம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் அதற்கான அனுமதியடங்கிய பிரதி இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

டிவினியா நிலுசினியின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க நேற்று 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி அழைப்பாணை விடுத்தது. கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தர்வை பிறப்பித்தார். அதன் பிரகாரமே நேற்று இந்த விவகாரம் குறித்த நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

டென்மார்க்கை சேர்ந்த ஒருவரினால் யாழ்பாணத்தில் இயக்கப்படும் ரியூப் தமிழ் எனும் யூரியூப் குழுவின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியினை கைது செய்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டரீதியற்றதென சுட்டிக்காட்டினார்.

இந்த கைது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி டியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா நிலுசினியும் தமிழ் கொடியின் பணிப்பாளர் விமல் ராஜ் என்பவரும் யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட டிவினியா நிலுசினி தற்போது தங்காலை தடுப்பு முகாமிலும், தமிழ் கொடியின் பணிப்பாளரான விமல் ராஜ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திலும் 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயம் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு அவசியமாகும். எனினும் இந்த விவகாரத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டதாகவோ அல்லது தடுப்பு காவலில் இருக்கும் கைதிக்கு அவ் உத்தரவின் பிரதிகள் வழங்கப்பட்டதாகவோ கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எவ்வித அறிவித்தல்களும், அறிக்கைகளும் இம்மன்றுக்குவழங்கப்படவில்லை.

அவர்களின் கைதும் தடுத்து வைப்பும் சட்டத்திற்கு முரணானது. டிவினியா நிலுசினி தற்பொழுது தங்காலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ட்டுள்ளார். சட்ட விரோதமான கைது, தடுப்புக் காவலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய டிவினியா நிலுசினியின் அறிவுறுத்தல்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே இது குறித்து, மன்றில் ஆஜரான பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் வழக்கு நெறிப்படுத்தல் பிரிவின் பொறுப்பதிகாரி கபில ஹேவமான்னவிடம் நீதிவான் பதில் கோரினார்.

முதலில் சட்டத்தரணிகளுக்கு சந்தேகநபரைச் சந்திக்க அனுமதியளிப்பது தொடர்பிலான விடயம் தொடர்பில் பதிலளிக்க, தனது பணிப்பாளரிடம் அது குறித்து வினவுவதற்கான நேரத்தை குறித்த பொறுப்பதிகாரி பெற்றார்.

இந் நிலையில், தமது சேவை பெறுநரை சந்திக்க பொலிசாரின் அனுமதி கோரத் தேவை இல்லை எனவும், தமக்கு சென்று சந்திக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தும் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளை ஜனாஹிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிவானுக்கு கையளித்தார்.

இவ்வாறான பின்னணியில், தடுப்புக் காவலில் உள்ள டிவினியா நிலுசியை சந்திக்க அனுமதிப்பதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மன்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்தே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயம் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு 3 மாதங்களின் பின்னர் புதுப்பிக்கப்பட வேண்டும். எனது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த மாதம் முடிவடைந்து விட்டது. இன்று வரை குறித்த தடுப்புக் காவல் கட்டளை தொடர்பாகவோ அவர்களின் கைது தொடர்பாகவோ எந்த அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வில்லை, தற்போது எந்த உத்தரவும் இல்லாமல் அவர் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளார் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரியிடம் நீதிவான் மீள கேள்வி எழுப்பிய போதே, தொடர்ந்து டிவினியாவை தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சிடம் கடந்த முதலாம் திகதி கோரிக்கை அனுப்பட்டுள்ளதாகவும், அதர்கான அனுமதி பிரதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் குறித்த அதிகாரி வெளிப்படுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
3
+1
1
+1
1
+1
0
+1
5

Related posts

இன்று ஜூன் 14: உலக இரத்த தான தினம்!

Pagetamil

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்: அதற்கும் இந்தியாவே உதவி!

Pagetamil

இரண்டு முகக்கவசம் அணிய வேண்டுமா?: சுகாதார அமைச்சு விளக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!