தென் அமெரிக்காவில் மிகப்பிரபலமான கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியின் சம்பியன் பட்டத்தை 28 ஆண்டுகளுக்குப்பின் அர்ஜென்டினா அணி மீண்டும் கைப்பற்றியது.
ரியோடி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சம்பியன் பட்டத்தை வென்றது. கோபா அமெரி்க்கா போட்டியில் அர்ஜென்டினா சம்பியன் பட்டம் வெல்வது இது 15வது முறையாகும். ஆட்டநாயகன் விருது கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் டி மரியாவுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் அச்சத்தால் போட்டி நடந்த ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மார்கானா அரங்கில் 10 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு முன் கடைசியாக கடந்த 1993ஆம் ஆண்டு சம்பின் பட்டத்தை அர்ஜென்டினா அணி வென்றிருந்தது. அதன்பின் 28 ஆண்டுகளுக்குப்பின் லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
#CopaAmérica 🏆@Argentina salió campeón de América y estas fueron las acciones más destacadas de la final ante Brasil
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/uXB9krhnbB
— Copa América (@CopaAmerica) July 11, 2021
அர்ஜென்டினா சீனியர் அணிக்கு லயோனல் மெஸ்ஸி தலைமையில் பெறும் முதல் கோப்பை இதுவாகும். ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப்பின் தனது அணிக்காக மெஸ்ஸி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினா வீரர்கள் சரியான திட்டமிடலுடன் விளையாட வேண்டும் என்று முடிவோடு களமிறங்கினர். முதல்பாதியில் ஒரு கோல் அடிக்க வேண்டும், அதன்பின் பிரேசிலை கோல் அடிக்கவிடாமல் தடுப்பாட்டத்தைக் கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து கடைசிவரை மாறவில்லை.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டீ போல் தன்னிடம் இருந்து பந்தை ஏஞ்சல் டி மரியாவுக்கு பாஸ் செய்தார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று தகுந்த தருணத்தை எதிர்பார்த்த மரியா, பிரேசில் வீரர் எடர்ஸனை லாவகமாகத் தாண்டி பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார்.
இந்த கோலை பிரேசில் வீரர்கள் யாரும் எதிர்பார்க்காததால், சில வினாடிகள் திகைத்துப் போய் நின்றுவிட்டனர். இதையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது.
அதன்பின் அர்ஜென்டினா அணி தடுப்பாட்டத்தைக் கையாண்டது. பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முயன்ற வாய்ப்புகளை தகர்த்தனர். 2வது பாதியிலும் பிரேசில் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றும், அர்ஜென்டினா வீரர்கள் சுவர் போல் தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர்.
கடைசி நேரத்தில் பிரேசில் அணிக்கு கோர்னர் கிக் கிடைத்தது, அதை நெய்மர் கோல் அடிக்க சுழற்றி அடிக்க, பிரேசில் கப்டன் தியாகோ சில்வா தலையில் முட்டி கோல் அடிக்க முயன்றார், ஆனால், பந்து கோல் போஸ்ட்டுக்கு மேல் பட்டுச் சென்று ஏமாற்றமளித்தது.
லயோனல் மெஸ்ஸி ஆட்டம் இறுதிப் போட்டியில் எதிர்பார்த்த வகையில் இல்லை. 88வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்தது, ஆனால், அதை பிரேசில் கோல் கீப்பர் தடுத்துவிட்டார். இந்த கோபா அமெரிக்காவில் மெஸ்ஸி ஒட்டுமொத்தமாக 4 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார். 2வது இடத்தில் அர்ஜென்டினா வீரர் லாடாரோ மார்டினஸ் 3 கோல்கள் அடித்துள்ளார்.
¡A los pies de la copa! Enorme festejo del plantel argentino con su gente 🇦🇷
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Sgr48GOBkR
— Copa América (@CopaAmerica) July 11, 2021
ஆட்டத்தின் முடிவில் 0-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது.
இதற்கு முன், 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினா கோபா அமெரி்க்கா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
லீக் சுற்றில் சிலி, உருகுவே, பாராகுவே, பொலிவியா நாடுகளை வென்று காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. காலிறுதியில் ஈக்வெடார் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வென்று அரையுறுதிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது. அரையிறுதியில் கொலம்பியா அணியுடன் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா டை செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட பெனால்டி சூட்அவுட்டில் கொலம்பியா அணியை 2-3 என்ற கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.