அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
இந்தியாவில் பிறந்து, விண்வெளிக்கு பறந்த முதல் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர், அரியானா மாநிலம் கர்னாலில் பிறந்த கல்பனா சாவ்லா.
அவருக்கு பின் விண்வெளிக்கு பறக்கும், இந்தியாவில் பிறந்த 2-வது பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா தனக்கு சொந்தமாக்கிக்கொள்ளப்போகிறார்.
34 வயதாகும் ஸ்ரீஷா, அண்டை மாநிலமான ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்தவர். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை டாக்டர் பாண்ட்லா முரளிதரும், தாய் அனுராதாவும் அமெரிக்கா ஹூஸ்டனுக்கு இடம்பெயர்ந்தனர். விஞ்ஞானியான பாண்ட்லா முரளிதர், அமெரிக்க அரசுத் துறையில் பணிபுரிகிறார்.
அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ஸ்ரீஷா விண்வெளிக்கு அனுப்பும் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இணைந்தார். அங்கு, அரசு சார்ந்த விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை கவனித்துவந்த இவர், பின்னர் நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் அமெரிக்காவில் நிறுவிய தனியார் விண்வெளி பயண நிறுவனம்தான், விர்ஜின் கேலக்டிக்.
இந்த நிறுவனத்தின் ‘வி.எஸ்.எஸ். யூனிட்டி’ விண்கலம், வருகிற 11-ந்தேதி அமெரிக்காவின் நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்குப் பயணத்தைத் தொடங்குகிறது. அதில் பயணிக்கப்போகும் 6 விண்வெளி வீரர், வீராங்கனைகளில் ஒருவர் ஸ்ரீஷா. இவருடன் செல்லும் விண்வெளி பயணிகளில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சனும் அடங்குவார்.
தனது விண்வெளி பயணம் குறித்து டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீஷா, இது மிகப்பெரும் கவுரவம் என்று கூறியுள்ளார்.
ஆந்திராவில் வசிக்கும் ஸ்ரீஷாவின் 85 வயதான தாத்தா டாக்டர் ராகையா, பேத்தியின் பெருமிதப் பயணம் குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.