26.3 C
Jaffna
November 28, 2021
உலகம்

நம்ப முடியாத நட்பு: காப்பாற்றியவருடனேயே சுற்றித் திரியும் புறா!

பிரான்ஸைச் சேர்ந்தவர் 80 வயது சேவியர் பாகெட். இரண்டு ஆண்டுகளாக இவருடைய மிகச் சிறந்த தோழனாக இருக்கிறது ஒரு வெள்ளைப் புறா. இவர் எங்கு சென்றாலும் புறாவும் கிளம்பிவிடும். சைக்கிளில் கடை வீதிக்குச் சென்றால் அவரின் தொப்பி மீது அமர்ந்துகொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதைப் புரிந்துகொண்டு நடப்பது இந்தப் புறாவின் சிறப்பாக இருக்கிறது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சேவியரும் புறாவும் சந்தித்துக்கொண்டனர். தோட்டத்தில் சேவியர் நடந்து கொண்டிருந்தபோது, மரத்திலிருந்த கூட்டிலிருந்து ஒரு புறா குஞ்சு கீழே விழுந்தது. மிகச் சிறிய குஞ்சு. இறக்கைகள் முளைக்கவில்லை. அதனால் பறக்க இயலவில்லை. வலியோடு கண்களை உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் பசியோடு ஒரு பூனை காத்துக் கொண்டிருந்தது. சேவியருக்கு ஏனோ புறாவைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை. வீட்டுக்குள் சென்றுவிட்டார். தன் மனைவியிடம் ஒரு புறா குஞ்சு கீழே விழுந்திருப்பதையும் அது பூனைக்கு இரையாக இருப்பதையும் சொன்னார். உடனே அவர் மனைவி புறா குஞ்சைக் காப்பாற்றும்படிக் கேட்டுக்கொண்டார்.

அவசரமாகத் தோட்டத்துக்கு வந்தார் சேவியர். நல்லவேளை பூனை இன்னும் தொலைவில் இருந்து மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது. புறா குஞ்சை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்தார். காயத்துக்கு மருந்திட்டார். பால் புகட்டினார். சில வாரங்களில் புறாவுக்கு உடல் குணமாகி, இறக்கை முளைத்துவிட்டது. இனியும் வீட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், வெளியில் பறக்கவிட்டார் சேவியர்.

“பறவைகளை வீட்டில் வைத்து வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பறவைகளை வீட்டுக்குள் அடைத்து வைப்பது சரியல்ல. புறாவை வெளியில் விட்ட பிறகும் அது எங்கள் வீட்டிலேயே பெரும்பாலும் பொழுதைக் கழித்து வருகிறது. நான் புறாவுக்கு உணவு கொடுப்பதில்லை. வெளியே சென்று உணவு தேடிச் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்துவிடுகிறது. நான் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால், ஆங்காங்கே அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கும். தோட்ட வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றால், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து, அலமாரி, மேஜை, படுக்கை போன்ற இடங்களில் அமர்ந்துகொள்ளும். செருப்பையும் தொப்பியையும் மாட்டிக்கொண்டால், வெளியே செல்லப் போகிறேன் என்று புரிந்துவிடும். ஜம்மென்று தொப்பி மீது அமர்ந்துகொள்ளும். நான் பல ஆண்டுகளாக இந்த நகரில் இருந்தாலும் புறாவின் நட்புக்குப் பிறகே பிரபலமாகியிருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளாகத் தினமும் புறா வந்து கொண்டுதான் இருக்கிறது. சின்ன புறாவால் ஒரு உதவியை நினைவில் வைத்துக்கொண்டு அன்பாக இருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு அன்பான புறாவை நான் வீட்டுக்குள் அடைத்து வைக்க விரும்பவில்லை. என் மீது புறாவுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் இந்த நட்பு சாத்தியமாகியிருக்கிறது” என்கிறார் சேவியர் பாகெட்.

உள்ளூரில் மட்டுமல்ல, பாரீஸ் முழுவதும் சேவியரும் புறாவும் செய்திகளில் இடம்பிடித்து விட்டனர். பேட்டி கொடுப்பதும் படம் எடுக்க அனுமதிப்பதும் இருவருக்கும் பழக்கமாகிவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

உலகில் மழையே பெய்யாத கிராமம் எது தெரியுமா?

divya divya

ஐவரி கோஸ்ட் அதிபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு: முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை!

divya divya

நைஜீரியா கடத்தலிற்கு ஐ.நா கண்டனம்: ஏற்கனவே கடத்தப்பட்ட 42 பேர் விடுதலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!